எல்.வி பிரசாத் பிலிம் & டிவி அகடமியின் பட்டமளிப்பு விழா - இயக்குநர் ஹன்சல் மேத்தா பங்கேற்பு
சென்னையில் உள்ள எல்.வி பிரசாத் பிலிம் & டிவி அகடமியின் 11 வது பட்டமளிப்பு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நேற்று மாலை (ஆகஸ்ட் 19) நடைபெற்றது. இதில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்த சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மற்றும் கவிதா பிரசாத் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.
மேலும், மாணவர்கள் உருவாக்கிய 16 டிப்ளமோ குறும்படங்களில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்த குறும்படங்களில் சிறந்த குறும்படங்களை நடிகை ரோஹினி, ஒளிப்பதிவாளர்கள் வெய்ட் ஆங்கிள் ரவிஷங்கள், செழியன், ஓவியர் டிராஸ்கி மருது உள்ளிட்ட 7 பேர் கொண்ட நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய சிவராமன், “
எல்.வி. பிரசாத் அவர்களால் தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம். அவர் ஒரு சிறந்த கதை சொல்லி. அவரின் படங்கள் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். 100 ரூபாயை எடுத்துக் கொண்டு மொழி தெரியாமல், வெறும் சினிமா ஆர்வத்தோடு மும்பைக்கு பயணமானார். இன்று அவர் பெயரில் பிரசாத் அகடமி உட்பட பல மில்லியன் சதுரடியில் கட்டிடங்கள் இருக்கின்றன.” என்று பேசினார்.
ரவி குப்தன் பேசும் போது, “இந்த ஆண்டு எங்கள் மாணவர்களிடம் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என கேட்டபோது, அவர்களில் பெரும்பாலானோர் சொன்னர் பெயர் ஹன்சல் மேத்தா. அவர் இங்கு வந்து சிறப்பித்தது எங்களுக்கு பெருமையான விஷயம். 2007ல் முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. இதுவரை 219 பேர் பிரசாத் அகடமியில் பட்டம் பெற்று சினிமாவில் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் ஒரு அகடமியில் இருந்து இவ்வளவு பேர் பட்டம் பெற்றிருப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை. எங்கள் அகடமி மாணவர்கள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றிருக்கிறார்கள். சினிமா துறையில் எங்களின் மாணவர்கள் பலர் இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர்களாக ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருக்கிறார்கள்.” என்றார்.
நடிகை ரோஹினி பேசும் போது, “ஒரு ஜூரியாக சிறந்த பல திறமையாளர்களை என்னால் காண முடிந்தது. சமூக பிரச்சினைகளை படங்களில் உங்களால் சொல்ல முடியும். நடிகர்கள் மற்றும் குழந்தைகளை கையண்ட விதமும் சிறப்பாக இருந்தது. கற்றுக் கொள்வதற்கு முடிவே கிடையாது. சினிமாவில் இருப்பது என்பது பெருமையான விஷயம்’” என்றார்.
இறுதியாக பேசிய சிறப்பு விருந்தினரான இயக்குநர் ஹன்சல் மேத்தா, “ஒரு விருது வாங்க எனக்கு 15 வருடங்கள் ஆகியது. நீங்கள் இப்போதே வாங்கியிருக்கிறீர்கள். அந்த ஸ்பிரிட்டை தக்க வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு எஞ்சினியர், இயக்குனரானது ஒரு விபத்து. ஷாகித் படத்துக்கு முன்பு 9 படங்கள் இயக்கியிருந்தாலும் ஷாகித் என் இரண்டாவது இன்னிங்க்ஸ். ஷாகித் என்னுடைய டிப்ளமோ திரைப்படம் போன்றது. ஷாகித் படத்தை நான் 35 லட்சத்தில், 11 மாதத்தில் எடுத்து முடித்தேன். டிஜிட்டல் யுகத்தில் கெனான் 5டி கேமராவில் தான் பெரும்பகுதி படத்தை படம் பிடித்தேன். சினிமாவில் கதை சொல்வது தான் முக்கியம். என்னுடைய கதை எப்படி பலரை போய் சென்றடையும் என்பதை தான் யோசிப்பேன். நேதாஜி பற்றி வெப் சீரீஸ் இயக்கி வருகிறேன். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைக்காக நான் படம் எடுப்பதில்லை. எதிர்காலத்துக்காக படம் எடுக்கிறேன். டிஜிட்டல் பிளாட்ஃபாரத்தால் நாம் நினைத்த கதையை எந்த இடையூறும் இன்றி சொல்ல முடியும். முதலில் உங்கள் படத்துக்கு நல்ல ரேட்டிங் வாங்க முயலுங்கள், நூறு கோடி வசூலை பின்பு பார்த்துக் கொள்ளலாம். சினிமா என்பது முற்றிலும் ஒரு கலை. அதில் நாமும் ஒரு பங்காக இருப்பது பெருமை" என்று கூறியவர், பிரசாத் அகடமி மாணவர்களின் சினிமா தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.