பள்ளிக்கு பூட்டு போட்டவர் மீது வழக்கு போட்ட ரஜினிகாந்த் மகள்
சென்னை கிண்டியில் ரஜினிகாந்தின் மனைவி லதா, ஆஷ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த பள்ளிக்கூடம் இயங்கி வரும் கட்டிடத்திற்கு பல ஆண்டுகளாக வாடகை தரவில்லை என்று கூறி, பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அதன் உரிமையாளர் வெங்கடேஷ்வரலு பூட்டு போட்டு பூட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், பள்ளி நிர்வாகம் சார்பில் அளித்த விளக்கத்தில், கட்டிட உரிமையாளரின் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக இத்தகைய நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், ஒழுங்காக வாடகை கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பள்ளிக்கு பூட்டு போட்டவரிடம் இழப்பீடு கேட்டு ரஜினிகாந்தின் மூத்த மகளும், ஆஷ்ரம் பள்லியின் செயலாளருமான ஐஸ்வர்யா தனுஷ், வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆஷ்ரம் பள்ளி கட்டிடத்துக்கு பூட்டு போட்ட அதன் உரிமையாளரின் நடவடிக்கையினால், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த உரிமையாளரிடம் இருந்து ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் மற்றும் பூட்டை அகற்ற உத்தரவிட வேண்டும், என்று ஐஸ்வர்யா தனுஷ் தொடர்ந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும், என்ற ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கை இன்று விசாரிக்கிறார்.