Aug 23, 2017 06:09 PM

’விவேகம்’படத்தில் அஜித் தவிர்த்த விஷயங்கள் - இயக்குநர் சிவா பேட்டி!

’விவேகம்’படத்தில் அஜித் தவிர்த்த விஷயங்கள் - இயக்குநர் சிவா பேட்டி!

நாளை வெளியாக உள்ள ‘விவேகம்’ படத்தை அஜித் ரசிகர்கள் தீபாவளியாக கொண்டாட உள்ளனர். தற்போதே திரையரங்க வாசலில் ரசிகர்கள் பட்டாளத்தை காண முடிகிறது. 

 

இதற்கிடையே, படம் குறித்த ருசிகர தகவல்களை படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் சிவா, ‘விவேகம்’ படத்தில் அஜித் தவிர்த்த விஷயங்கள் குறித்து கூறியுள்ளார்.

 

இது குறித்து இயக்குநர் சிவா அளித்து சிறு பேட்டி இதோ:

 

தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச உளவு திரில்லர் படம் ‘விவேகம்’. கிராமப்புற பின்னணியில் ‘வீரம்’, நகர்ப்புற பின்னணியில் ‘வேதாளம்’ படத்திற்கு பிறகு ஒரு சர்வதேச படம் பண்ணலாம் என்ற யோசனையை அஜித் சார் தான் கொடுத்தார். இந்த கதையை நான்கு மாதங்களில் தயார் செய்தோம். ‘விவேகம்’ படத்தில் ஆக்‌ஷனுடன் சேர்ந்து சரியான கலவையில் எமோஷன்களும் உள்ளன.

 

பல்கேரியா, சைபீரியா, க்ரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் படபிடிப்பு நடத்தினோம். அஜித் சார் மாபெரும் மனிதர் என்பது மட்டுமில்லாமல் அசுர உழைப்பாளி. இப்படத்தில் மூன்று பெரிய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் அஜித் சார் ரசிகர்களுக்கு ஒரு படையலாக இருக்கும். சண்டைக் காட்சிகளுக்கு டூப் வைப்பதை அஜித் சார் முற்றிலும் தவிர்த்துவிடுவார். இந்த படத்திலும் அப்படித்தான், டூப் விஷயங்களை அவர் தவிர்த்துவிட்டார். அப்படி டூப் போடாமல் அவர் செய்த ஒரு அசுர பைக் ஸ்டண்டை பார்த்த் அதனை இயக்கிய ஹாலிவுட் ஆக்‌ஷன் இயக்குநர் காலோயன் வொடெனிசரோவ் (Kaloyan Vodenicharov) அசந்து போய் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார். காரணம் அந்த சாலை பனியிலும், மழை நீரிலும் ஊறி வழுக்களாகவும் அபாயகரமாகவும் இருந்தது.

 

இந்த படத்துக்காக அஜித் சார் ஜிம்முக்கு மாதக்கணக்கில் சென்று கடும் உழைப்பு போட்டு தன் உடலை செதுக்கியுள்ளார். அவர் கடைபிடிக்கும் அவரது வாழ்க்கை தத்துவமான ‘Never Say Die’ என்பதை மையமாக வைத்தே இப்படத்தில் ‘Never ever give up’ என்ற வசனத்தை எழுதினோம்.

 

உண்மையான உழைப்பு தரும் பெயரும் வெற்றியும் வேறு எதனாலும் தர முடியாது. எங்கள் முழு அணியும் இரவு பகல் பார்க்காமல் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போட்டுள்ளது. அதனால் இப்படம் மிக அற்புதமாக வந்திருப்பதில் எங்களுக்கு ஆச்சரியம் இல்லை. ஆகஸ்ட் 24 ஆம் தேதியை குதூகலத்தோடு எதிர்நோக்கியுள்ளோம். இது ஒரு கோலாகல பண்டிகை வாரமாக இருக்கும் என நம்புகிறோம்.

 

இவ்வாறு உற்சாகத்துடன் பேசிய சிவாவுக்கு இன்று இரவு தூக்கம் வராது என்பது மட்டும் உறுதி.