'விவேகம்’ திருட்டு கதையா? - தயாரிப்பாளர் புகாரால் பரபரப்பு!
சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 24 ஆம் தேதி வெளியான ‘விவேகம்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதாக ஒரு பக்கம் தகவல் வெளியாக, மறுபக்கத்தில் படம் வெளியான இரண்டாவது நாளே திரையரங்கங்கள் ஈ ஓட்ட ஆரம்பித்துவிட்டது, என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘விவேகம்’ படத்தின் கதை தன்னுடையது என்று தயாரிப்பாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உருமையாளரான ரவீந்தர் சந்திரசேகரன், “சுட்டக் கதை’, ‘நளனும் நந்தினியும்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவர் ‘விவேகம்’ படத்தின் கதையில் 60 சதவீத கதை தன்னுடையது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ரவிந்தர் சந்திரசேகரன், தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “துரோகம். தன்னுடைய `ஐ-நா' படத்தின் கதையே விவேகம். கடந்த 2013-ஆம் ஆண்டு தனது கதையை அஜித்தின் நெருங்கிய உதவியாளர் ஒருவரிடம் சொல்லி, அஜித்திடம் கதை சொல்ல நேரம் ஒதுக்கும்படி கேட்டிருந்தேன். மூன்று வாரங்களுக்கு பிறகு எனக்கு வந்த பதிலில், அஜித் புதுமுக இயக்குநருடன் பணிபுரிவதில்லை என்பதால் அவரிடம் தன்னால் கதை சொல்ல முடியவில்லை.
இந்நிலையில், விவேகம் படத்தின் 60 சதவீத கதை மற்றும் நான் சொல்லிய திரைக்கதை படத்தில் இடம்பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதேநேரத்தில் இந்த கதை திருட்டில் அஜித் சாருக்கோ, இயக்குநர் சிவாவுக்கோ தொடர்பு இருக்கும் என்று நான் கூறவில்லை. இதற்கு முழு காரணமும் நான் கதை கூறிய அஜித்தின் நெருங்கிய உதவியாளர் தான் இதற்கு முழு காரணமும். விவேகம் படத்தை பார்க்க வைத்து தன்னை அழ வைத்தது அந்த உதவியாளர் தான்.
இந்த கதையை ‘ஐ-நா’ என்ற பெயரில் படமாக எடுக்க நினைத்திருந்தேன். நான் பணத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ இதை கூறவில்லை. தனது கதையை அவர்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டாலே போதும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.