விஜயை வைத்து பலவிதத்தில் பணம் சம்பாதிக்க தேணாண்டாள் திட்டம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் போன்றவர்கள் நடிக்கும் படங்கள் சொதப்பினாலும், போட்ட பணம் வந்துவிடும் என்பதால், இவர்களது கால்ஷீட் கிடைத்தால் போதும் கோடி கோடியாய் கொட்ட தயாரிப்பு நிறுவனங்கள் பல தயாராக இருக்கின்றன.
அதன்படி, விஜயை வைத்து ‘மெர்சல்’ என்ற படத்தை ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் 100 வது படமான இப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்தில் வடிவேலு காமெடியில் கலக்கியிருக்கிறார். இப்படம் வெற்றிக்குறிய அனைத்து அம்சங்களுடன் கொண்ட படமாக உருவாகும் ‘மெர்சல்’ படத்தில் ஆடியோ வெளீயீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஜாம்பவான்களே விஜய்க்கு உள்ள ரசிகர்கள் பலத்தை பார்த்து வியந்து போகும் அளவுக்கு மிகப்பெரிய மாஸை விஜய் ரசிகர்கள் காட்டினார்கள். அதன்படி, படம் நிச்சயம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று சினிமா வியாபாரிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
இந்த நிலையில், படம் தியேட்டரில் ஓடி கிடைக்கும் வசூல் ஒரு பக்கம் இருக்க, அதை தவிர்த்து இப்படத்தை வைத்து எந்த எந்த வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்பதை யோசித்த தேனாண்டாள் நிறுவனம், அதற்கான வேலைகளை தீவிரம் காட்டி வருகிறது.
அதில் ஒன்று தான் ‘மெர்சல்’ என்ற தலைப்புக்கு டிரேட் மார்க் சான்றிதழ் வாங்கியுள்ளது. ‘மெர்சல்’ என்பது சென்னை வாசிகள், அதுவும் குறிப்பாக வட சென்னையில் பேசப்படும் வார்த்தையாகும். ’மிரண்டுவிட்டேன்’ என்பதை தான் வட சென்னை வாசிகள் மெர்சலாய்ட்டேன், என்று சொல்வார்கள். தற்போது இந்த வார்த்தைக்கு தான் தேனாண்டாள் நிறுவனம் டிரேட் மார்க் வாங்கியிருக்கிறது.
இனி யாராவது ‘மெர்சல்’ என்ற வார்த்தையை எதாவது பொருட்கள் மீது அச்சிட வேண்டும் என்றாலும், அல்லது விளம்பரத்தில் பயன்படுத்தினாலோ தேனாண்டால் நிறுவனத்திற்கு கப்பம் கட்டிவிட்டுதான் பயன்படுத்த வேண்டும். இதனால் அந்நிறுவனத்திற்கு பல லட்சம் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகத் தான் அந்நிறுவனம் அவசர வசரமாக ‘மெர்சல்’ டைடிலுக்கு டிரேட் மார்க் வாங்கியது. மேலும், தென்னிந்தியாவின் சினிமா டைடிலுக்கு டிரேட் மார்க் வாங்கிய முதல் படம் ‘மெர்சல்’ தான். அதேபோல் ட்விட்டரில் எமோஜி வெளியிட்ட தென்னிந்தியாவின் முதல் படமும் இப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.