பின்னணி பாடகரின் கனவை நிஜமாக்கிய “ஆளப்போறான் தமிழன்...”
ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்தின் இடம்பெற்றுள்ள “ஆளப்போறான் தமிழன்...” என்ற பாடல் வெளியான நாள் முதல் இருந்து தமிழகம் மட்டும் இன்றி உலகத் தமிழர்கள் அனைவரையும் முனுமுனுக்க வைக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்பாடலை பாடியவர் பின்னணி பாடகர் தீபக். இதுவரை 150 பாடல்களை தீபக் பாடியிருந்தாலும், அவரது கனவை நிஜமாக்கியது என்னவோ “ஆளப்போறான் தமிழன்...” பாடல் தான்.
அப்படி என்ன கனவை இப்பாடால் நிஜமாக்கியது என்கிறீர்களா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வேண்டும் என்பது தான் தீபக்கின் மிகப்பெரிய கனவு. அந்த கனவு மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் நிஜமாகியுள்ளது.
தனது கனவு நிஜமானதோடு, தனது குரல் தற்போது உலக நாடுகள் பலவற்றில் பிரபலமாகியுள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் தீபக்கை சந்தித்து பேசிய போது,
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டாப் 12 போட்டியாளரக தேர்வானேன், அதுவே பாடகனாக வெளியுலகுக்கு என்னை அறிமுகமாக்கிய முதல் மேடை. பின் பல முயற்சிகளுக்கு பிறகு விஜய் ஆண்டனி என்னை திரையுலகிற்கு பாடகராக அறிமுகப்படுத்தினார். 'நான்' படத்தில் 'தினம் தினம் சாகிறேன்' என்ற பாடலே சினிமாவிற்காக நான் பாடிய முதல் பாடல். 2014 ஆம் ஆண்டில் தளபதி விஜய் அவர்களின் 'ஜில்லா' படத்தின் தீம் சாங்கை பாடும் வாய்ப்பு கிடைத்தது, அது என்னை பாடகராக அடுத்த நிலைக்கு எடுத்து சென்றது. அதிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே அஜித்குமாரின் 'வீரம்' படத்தின் தீம் சாங்கையும் பாடினேன். அதன் பிறகுதான் திரையுலகில் பலருக்கும், வெளியுலகிற்கும் தீபக் என்ற பாடகரை வெகுவாக தெரிய ஆரம்பித்தது. இதுவரை கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல், 150 பாடல்கள் வரை பாடியுள்ளேன்.
தற்போது மீண்டும் விஜய் சாருக்காக, முதல் பாட்டை பாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். அதுவும் ஏ.ஆர்.ரகுமான் சார் இசையில் நான் பாடப் போகிறேன் என்றவுடன் எனது சந்தோஷம் இரட்டிப்பு ஆனது. ஒரு பாடகனாக அவர் இசையில் ஒரு முறை பாடவேண்டும் என்பது கனவு. அவரது இசையில் பேக்கிங் பல முறை பண்ணியிருக்கிறேன். ஆனால் பாடகர் என்ற அங்கீகாரத்தை கொடுத்தது இந்த டிராக் தான்.
முதன் முதலில் பாட வந்தவுடன் விவேக் அண்ணன் வரிகளை பார்த்து பிரமித்துப்போனேன். அப்போதே பாடல் வேற லெவல் என்பதை புரிந்துக் கொண்டேன். பாடல் பாடி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பின்னரும், நான் பாடிய பகுதிகள் ஒகே ஆகுமா என்ற பயம் இருந்தது. மறு நாள் நான் பாடிய பகுதிகள் ஒ.கே.ஆனது என்று செய்தி வந்ததும் நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, வார்த்தைகளும் இல்லை.
பாடல் வெளியாகி டிரெண்ட் ஆனதுமே விவேக் அண்ணன் என் குரல் வரும் பகுதிகள் நன்றாக இருந்தது என்று ட்வீட் போட்டிருந்தார்.
ஊடக நண்பர், தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் என்று அணைவருமே சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இத்தனை மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக இருந்து எனக்கு வாய்ப்பளித்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும், இயக்குநர் அட்லீக்கும், தளபதி விஜய் அண்ணன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்தார்.