“தமிழக அரசின் விருது ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது” - விமல் நெகிழ்ச்சி!
2௦09 முதல் 2014 வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுபெற்ற பலரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.. அந்தவகையில் 2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது.
“2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘பசங்க’ படமும், 2010ஆம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக ‘களவாணி’ படமும் 2011ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றிருக்கின்றன.. மேலும் 2014ஆம் வருடத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருது ‘மஞ்சப்பை’ பட இயக்குனர் ராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான இந்த நான்கு படங்களிலும் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமையும் அடைகிறேன்.
மேலும் ‘வாகை சூடவா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது எனது மகிழ்ச்சியையும் எனது பொறுப்பையும் இன்னும் அதிகரித்துள்ளது. இன்னும் நல்ல படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஊக்கத்தை இந்த விருது எனக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முழு காரணமான எனது இயக்குனர்களான பாண்டிராஜ், சற்குணம் மற்றும் ராகவன் ஆகியோருக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் விருதுபெற்ற சக கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
எனக்கு ஆரம்பகாலம் தொட்டு ஆதரவு அளித்துவரும் பத்திரிக்கை, ஊடகங்களுக்கும் எனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.