சைலண்டாக சாதித்துக் கொண்டிருக்கும் கோடம்பாக்க சவுண்ட் பார்ட்டி!
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளிய படங்களாகட்டும், விமர்சகர்களிடம் பாராட்டு பெற்று சாதனை படைத்த படமாகட்டும், எந்த வித படமாக இருந்தாலும், இசையை தாண்டிய சப்தம் என்பது ரொம்ப முக்கியம். அப்படிபட்ட சப்தங்களை ரியாலட்டி குறையாமல் கொடுக்கும் பணியை மேற்கொள்ளும் சவுண்ட் இன்ஜினியர்களில் முன்னணியில் இருப்பவர் உதயகுமார்.
திரைக்கு பின்னாள் பணியாற்றும் கலைஞர்களின் உழைப்பு மட்டுமே திரையில் தெரியுமே தவிர, அவர்கள் எப்போதும் திரை மறைவில் தான் இருப்பார்கள். அப்படிபட்டவர்கள் மீது அவ்வபோது வெளிச்சம் பட வைப்பது சில விருதுகள் மட்டுமே. அந்த வகையில், உதயகுமாருக்கு ‘பேராண்மை’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த சவுன்ட் என்ஜினியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நாக் (KNACK) ஸ்டூடியோவில் பணியாற்றும் உதயகுமார், அஜித்தின் ‘விவேகம்’, விஜயின் ‘மெர்சல்’ என்று படு பிஸியாக இருப்பவரை சந்தித்த போது, “பேராண்மை படத்திற்கு விருது கிடைக்கும் என்பதே அப்படத்திற்காக பணியாற்றும் போதே எனக்கு தெரியும். அந்த அளவுக்கு படத்தில் நிறைய ஸ்கோப் இருந்தது. ராக்கெட் லாஞ், காடு, அருவி என்று அனைத்து சப்தங்களையும் ஒரிஜினலாக திரையில் எடுத்து வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கேன்.
இதுவரை நான் பணியாற்றிய படங்களிலேயே சேலஞ்சிங்கான படம் என்றால் ‘விசாரணை’ தான். திரைக்கதையின் வீரியம் எந்த விதத்திலும் குறையாத வகையில் பார்த்து பார்த்து வேலை செஞ்சேன். அதன் பலன், பல இயக்குநர்கள் ”‘விசாரணை’ படத்தின் சப்தம் போல வேண்டும்” என்று கேட்கிறார்கள். இப்படி எதார்த்த படங்களுக்கு ஒரு விதத்தில் வேலை செய்தால், கமர்ஷியல் படங்கள் என்றால் அவற்றுக்கு வேறு விதத்தை கையாள வேண்டி இருக்கும். ஆனால், உழைப்பு என்னவோ எல்லா படங்களுக்கும் ஒன்றுதான்.
விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோ படங்களுக்கு பணிபுரியும் போது வேறு வகையில் வேலை செய்வது போல, அந்த படங்கள் எந்த் எந்த திரையரங்குகளில் திரையிடப்படும், அவற்றில் சப்தங்கள் எப்படி கேட்கும், எந்த மாதிரியான ஆடியன்ஸ் அங்கு வருவார்கள், போன்றவற்றையும் மனதில் வைத்து சப்தங்களை கொடுக்க வேண்டும். அவை அனைத்தையும் மனதில் வைத்து படத்திற்கு தேவையான சரியான சப்தங்களை கொடுப்பது தான் சவுண்ட் என்ஜினியரின் வேலை.” என்று தனது பணி குறித்து பகிர்ந்துக் கொண்டார்.
சின்ன படங்களாகட்டும், பெரிய படங்களாகட்டும் தமிழ் சினிமாவில் வெளியாகும் அனைத்து படங்களிலும் சவுண்ட் என்ஜினியர் என்றால் உதயகுமார் என்ற பெயரை தவிர வேறு எந்த பெயரையும் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பிஸியாக வலம் வரும் உதயகுமார், தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி போன்ற படங்களுக்கும் பணியாற்ற தொடங்கியுள்ளார்.
தற்போது தமிழ அரசின் விருதை வென்றிருப்பவர், தேசிய விருது மட்டும் இன்றி ஆஸ்கார் விருதையும் வெல்ல வேண்டும் என்று வாழ்த்துவோம்.