கிரிக்கெட் அணியின் உரிமையாளரான நடிகர் சூர்யா!
இந்திய திரை நட்சத்திரங்கள் அரசியலோடு எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அதே அளவுக்கு விளையாட்டுத் துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல நடிகர்கள் முதலீடு செய்து வரும் நிலையில், தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் ‘இந்தியன் ஸ்டீரிட் பீரிமியர் லீக் - டி10’ (Indian Street Premier League - T10) 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடிகர் சூர்யா முதலீடு செய்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் டென்னிஸ் பந்து போட்டியாக நடைபெற இருப்பதோடு, எதிர்கால வீரர்களை உருவாக்குவதற்காகவும், நகர்ப்புறங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கான கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கிலும் இத்தொடர் நடத்தப்பட இருக்கிறது. தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சிறந்த வீரர்களை உலக அளவில் உயர்த்துவதற்கான நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த போட்டிக்கான வீரர்கள் தேர்வு இந்தியாவின் ஒவ்வொரு மூளை முடுக்குகளிலும் நடைபெற உள்ளது.
இந்த தொடரில், சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஐ.எஸ்.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னை அணியின் உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கைப்பற்றியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் கைப்பற்றியுள்ளனர்.