மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்! - முன்னணி இயக்குநருடன் கைகோர்த்தார்

’கைதி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ், ’மாஸ்டர்’ படத்தில் தனது மிரட்டலான நடிப்பு மூலம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்தார். அப்படத்தை தொடர்ந்து, ‘அநீதி’ படத்தில் நாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் தற்போது பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழ்ப் படங்களை தாண்டி பிற மொழி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ள அர்ஜுன் தாஸ், மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். ‘ஜூன்’, ‘மதுரம்’ போன்ற திரைப்படங்கள் மற்றும் ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ்’ இணையத் தொடர் என மிகப்பெரிய வெற்றி படைப்புகளை கொடுத்த இயக்குநர் அகமது கபீர் இயக்கும் படத்தின் மூலம் தான் அர்ஜுன் தாஸ், மலையாள சினிமாவில் நாயகனாக கால் பதிக்கிறார்.
‘ஹிருதயம்’, ‘குஷி’ மற்றும் ‘ஹாய் நானா’ ஆகிய படங்கள் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹேஷாம் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
காதலை மையமாக கொண்டு உருவாக உள்ள இப்படத்தின் பணியாற்ற உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.