வாய்ப்பு கிடைத்தால் ஹீரோவாகவும் சாதிப்பேன் - அறிமுக நடிகர் ஆனந்த்ராம்
’மீசைய முறுக்கு’ என்றதும் நினைவுக்கு வருவது ஹிப் ஹாப் தமிழா ஆதி மட்டும் அல்ல, கட்டுமஸ்தான உடம்போடு ஆதியின் எதிரிகளுக்கு குத்துவிடும், அவரது தம்பி வேடத்தில் நடித்த நடிகரும் கூடத்தான். அவர் தான் அறிமுக நடிகர் ஆனந்த்ராம்.
‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ள ஆனந்த்ராமுக்கு முதல் படமே பல பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்ததோடு, பல வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்து வருகிறது. தமிழகத்தை கடந்து ஆந்திராவில் இருந்தும் மனுஷனுக்கு வாய்ப்புகள் குவிகிந்து வருகிறதாம். தற்போது முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்கும் இன்னும் தலைப்பு வைக்காத தெலுங்கு படம் ஒன்றில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆனந்த்ராமிற்கு கிடைத்திருக்கிறது.
சிறு வயது முதல் நடிகராக வேண்டும் என்ற கனவோடு, அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்த ஆனந்த்ராம், லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துவிட்டு கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய மையங்களில் பயிற்சி பெற்று தனது நடிப்பு திறமையை வளர்ந்துக் கொண்டு கடந்த நான்கு வருடங்களாக வாய்ப்பு தேடி வந்துள்ளார்.
நண்பர்களின் உதவியுடன் ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதியின் தம்பியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர், தனது முதல் படத்திலேயே பலரது பாராட்டையும் பெற்றுவிட்டார். படத்தில் இவர் வரும் காட்சிகளில் ரசிகர்கள் விசில் அடித்து கைதட்டுவதை பார்த்து, அறிமுக நடிகருக்கு இப்படியொரு வரவேற்பா என்று கோடம்பாக்கமே சற்று வியந்து தான் போயிருக்கிறது.
தனக்கு இப்படி ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்கிய ஆதியை சந்தித்து நன்றி தெரிவித்த ஆனந்த்ராமுக்கு இரண்டு லட்டு சாப்பிட்ட அனுபவத்தை தரும் வகையில், “இது தொடக்கம் தான், உன்னுடைய வளர்ச்சியை காண ஆசைப்படுகிறேன்” என்று வாழ்த்தியிருக்கிறார்.
தனது முதல் படத்தின் மூலம் தனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தையும், நட்பு வட்டாரத்தையும் சரியாக பயன்படுத்தி, திரைத்துறையில் நல்ல இடத்தை பிடிக்கும் முயற்சியில் உள்ள ஆனந்த்ராம், குணச்சித்திரம், வில்லன் என்று அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து நல்ல நடிகர் என்ற பெயர் எடுப்பதோடு, எதிர்காலத்தில் ஹீரோவாகவும் நடித்து சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, என்பதை நிரூபித்துள்ள இந்த இளம் நடிகர் மேலும் மேலும் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.