கோலிவுட் கலைஞர்கள் கொண்டாடும் மலேசியாவின் ‘காரசாரம்’!
தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டு மொத்த கலைஞர்களையும் கொண்டாடுவதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் தான். அதனால் தான், கலை நிகழ்ச்சி என்றாலே கோலிவுட் கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக இந்த இரு நாடுகளில் குவிந்துவிடுவார்கள். அம்மக்கள் கொடுக்கும் ஆதரவும், அவர்கள் கொண்டாடும் விதமும் வேறு எந்த நாட்டுக்கு சென்றாலும் கிடைக்காது என்பதால், உலகில் பல நாடுகளுக்கு பயணித்தாலும், கோலிவுட் கலைஞர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருப்பது மலேசியா மற்றும் சிங்கப்பூர் மட்டுமே.
இப்படி ரசிகர்களால் கோலிவுட் நட்சத்திரங்களை ஈர்த்த இந்த இரு நாடுகளில் ஒன்றான மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்று கோலிவுட் கலைஞர்கள் கொண்டாடும் உணவமாகியிருக்கிறது. இதற்கு காரணம், அந்த உணவகத்தின் சுவை மட்டும் இன்றி தமிழ் பாரம்பரிய உணவு வகைகள் அனைத்துக்கும் இந்த உணவகம் மிகவும் பிரசித்திபெற்றது என்பதும் தான்.
’காரசாரம்’ என்ற பெயரில் இயங்கும் இந்த உணவகத்தை நடத்தி வரும் டத்தோ சரவணன், அம்மா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் மலேசியாவில் திரைப்பட தயாரிப்பு, விநியோகம், தொல்கைக்காட்சி தொடர்கள் தயாரிப்பு மற்றும் கலை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது ‘காரசாரம்’ மூலம் உணவக தொழிலிலும் முத்திரை பதித்துள்ளார்.
தமிழர்களின் கலாச்சார உணவுகளின் தன்மை மாறாமல், அதன் மருத்துவக் குணங்கள் குறையாமல் வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படும் ‘காரசாரம்’ உணவகத்தின் ’மண்சட்டி சோறு’ என்ற உணவு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவுக்கு செல்லும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள், பாடகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்து கலைஞர்களும் இந்த உணவகத்திற்கு வருகை தந்து அதன் உணவுகளை சுவைத்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, பிரபல பின்னணி பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் அந்தோணி தாசன், சமீபத்தில் இந்த உணவகத்தில் சுவைத்து பாராட்டியதோடு, தனது பாணியில் ‘காரசாரம்’ உணவகத்தை புகழ்ந்து ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.
தமிழ் பண்பாட்டு கலாச்சாரங்கள் மறக்கப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் தமிழர்களின் உணவுகளை மீட்டு உருவாக்கம் செய்யும் நோக்கமாக நமது பண்பாட்டு உணவை நாங்கள் உலகம் முழுவதும் விரிவுபடுத்தவுள்ளோம் என்கிறார் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ சரவணன்.
மண்சட்டிச்சோறு உணவுக்காக ’மலேசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம் பிடித்திருக்கும் ‘காரசாரம்’ தற்போது மலேசியாவின் புகழ் பெற்ற உணவகமாக திகழ்வதோடு, விரைவில் இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.