அறிமுக நடிகர் ராகின்ராஜ் மிகப்பெரிய நடிகராக வருவார்! - ‘வெட்டு’ நாயகனை பாராட்டிய பிரபலங்கள்

ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில் சேலம் வேங்கை அய்யனா தயாரிப்பில், அம்மா ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘வெட்டு’. அறிமுக நடிகர் ரஜின்ராஜ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக அங்கிகதா நடித்திருக்கிறார். இவர்களுடன் சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரோகித் எஸ்தர், அவினாஷ், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா, இந்திரஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரபல நடன இயக்குநராக அம்மா ராஜசேகர், கோபிசந்த் நாயகனாக நடித்து வெளியான ‘ரணம்’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பல படங்களை இயக்கி வெற்றி கொடுத்தவர், தற்போது தனது மகன் ராகின்ராஜை நாயகனாக வைத்து இயக்கியிருக்கும் தெலுங்குப் படம் ‘தலா’. கடந்த மாதம் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தற்போது தமிழில் ‘வெட்டு’ என்ற தலைப்பில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ’வெட்டு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் கஸ்தூரி ராஜா, நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிறைய அழைப்புகள் வரும், ஆனால் அதில் பங்கேற்பதற்கு முன்பு அந்த படம் பற்றி எதாவது தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அப்படி தான் பிரேம்நாத் என்னை அழைத்த போது படத்தின் டிரைலரை காட்ட சொன்னேன், அதை பார்த்ததும் எனக்கு ஹீரோ மீது தான் எண்ணம் சென்றது. அதன் பிறகு ஒளிப்பதிவாளர். ஹீரோவை பார்த்ததும் அவர் நிச்சயம் பெரிய ஹீரோவாக வருவார் என்று தோன்றியது. அவரது முகம், கண்கள், டிரைலர் அவர் காட்சிகளை பார்க்கும் போது நிச்சயம் அவர் பெரிய ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களும் அவரிடத்தில் இருந்தது. படமும் மிக சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை டிரைலர் பார்த்ததும் தெரிந்தது. அதேபோல், படத்தில் அம்மா செண்டிமெண்ட் இருக்கிறது. எனவே, படத்தின் தலைப்பின் டிசைனை கொஞ்சம் மற்றும்படி சொன்னேன், அதன்படி செய்தார்கள். பல நிகழ்ச்சிகளுக்கு செல்வோம், ஆனால் அதில் ஈடுபாடு காட்ட மாட்டோம், ஆனால் இந்த படத்தில் நான் ஈடுபாடு காட்டுவதற்கு காரணமே படத்தின் டிரைலர் என்ன ரொம்பவே கவர்ந்து விட்டது. படத்தை இயக்கிய அம்மா ராஜாசேகர் நடன இயக்குநராக இருந்த போது அவருடன் பணியாற்றியிருக்கிறேன். சிறப்பான கலைஞர். குறைந்த செலவில், பிரமாண்டமாக பாடல் காட்சிகளை எடுத்துக் கொடுப்பார். ஒரு பாடலில் கதை சொல்லும் முறையை அவர் தான் அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு தெரிந்து அவர் தான் என்று நினைக்கிறேன். ஒரு பாடலிலேயே ஒரு நல்ல கதையை சொல்லக்கூடியவர், படத்திலும் நிச்சயம் நல்ல கதையை தான் சொல்லியிருபார். எனவே, இந்த ‘வெட்டு’ திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், “இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான பிரேம்நாத் தான் என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்தார். நான் படம் இயக்கிய காலத்தில் அவர் என்னுடன் பணியாற்றியிருக்கிறார். அவர் இணை தயாரிப்பாளர் என்றதுமே எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. தயாரிப்பு என்பது எவ்வளவு சிரமமான பணி, அதை இப்படி இவர் செய்ய போகிறார், என்று நினைத்தேன். படத்தின் டிரைலரை பார்க்கும் போது, ஹீரோவுக்கு முதல் படம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். நிச்சயம் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சினிமாவில் வாரிசுகள் வருவது என்பது காலத்தின் கட்டாயம், அவர்களின் இரத்தத்திலேயே இருப்பதால், அவர்களின் வருகையை யாராலும் தவிர்க்க முடியாது. அப்படி தான் அம்மா ராஜசேகரின் மகன் ராகின்ராஜும் வந்திருக்கிறார். அவருக்கு எது வருகிறதோ அதை செய்ய வேண்டும். பெற்றோர்கள் சொல்வதால் படிக்க கூடாது. படிப்பு வந்தால் படிக்கலாம், இல்லை என்றால் நடிப்பு தான் வருகிறதா, சினிமாவுக்கு வாருங்கள், உழையுங்கள் வெற்றி பெறுங்கள். இதை என் அனுபவத்தில் தான் சொல்கிறேன். என் சுயநலத்திற்காக தான் நான் தனுஷை நடிக்க வைத்தேன். ஆனால், அவர் தலையில் நடிப்பு என்று எழுதி வைத்ததால் இன்று ஒரு பெரிய நடிகராக இருக்கிறார். செல்வராகவனுக்காக கஷ்ட்டப்பட்டு இஞ்சினியரிங் சீட் வாங்கி கொடுத்தே. மூன்று ஆண்டுகள் முடிந்ததும், படிக்க மாட்டேன், சினிமாவுக்கு போகப்போகிறேன் என்றார். எனக்கு ஒன்னுமே புரியல, பிறகு படிப்பை முடித்துவிட்டு வார், உனக்கு சினிமா ஏற்பாடு செய்கிறேன், என்றேன். அதன்படி படிப்பை முடித்ததும், சினிமா தான் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, அவர்களுக்கு எது வருகிறதோ, அதில் அவர்களை விட்டு விட வேண்டும். இன்று என் பேரனும் நடிகனாகி விட்டான். மூன்றாவது தலைமுறை சினிமாவுக்கு வந்திருக்கிறார். அம்மா ராஜாசேகரின் தன் மகனை ஹீரோவாக்குவதற்காக எவ்வளவு உழைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும். அவர்களுடைய நம்பிக்கை வீண் போகாது, நிச்சயம் ராகின்ராஜ் பெரிய நடிகராக வருவார்.” எண்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், “அம்மா ராஜசேகர் நடன இயக்குநராக இருக்கும் போதே தெரியும். சூர்யா இன்று நன்றாக நடனம் ஆடுகிறார் என்றால் அதற்கு அவரும் ஒரு காரணம் தான். அதிகமான வசதிகள் இல்லாத காலக்கட்டங்களிலேயே ஒரு பாடல் காட்சியை சிறப்பாக எடுக்க கூடியவர், அவர் இயக்குநராகி பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, மகனையும் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். நிச்சயம் அவர் மகன் பெரிய நடிகர் ஆவார். டிரைலர் சிறப்பாக வந்திருக்கிறது, படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
இயக்குநர் அம்மா ராஜசேகர் பேசுகையில், “தெலுங்கில் பல வெற்றி படங்களை இயக்கினாலும், தமிழில் படம் இயக்க வேண்டும், இப்படி நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை எது இன்று நிறைவேறியிருக்கிறது. என் மகன் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படவில்லை. என்னுடைய சுயநலத்தால் தான் அவரை நடிகராகியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய ஒரு படத்தின் நிகழ்வில் நான் அவமானப்பட்டேன், அப்போது என் எதிரியில் அமர்ந்திருந்த என் மகனை அழைத்து, இன்னும் இரண்டு வருடங்களில் என் மகனை நாயகனாக்குவேன், என்று பேசினேன். அதற்காக தான் அவர் இன்று ஹீரோவாக்கினேன். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தை தயாரித்திருக்கும் வேங்கை அய்யனார், நடிப்பின் மீது பேரார்வம் கொண்டவர். அதற்காக இந்த படத்தில் ஒரு வேடத்தில் மிகவும் சிறமப்பட்டு நடித்திருக்கிறார். என் மகன் ஹீரோவாக நடித்திருக்கும் படத்தை தமிழில் வெளியிடுவதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் சேலம் வேங்கை அய்யனார் பேசுகையில், “சினிமாவில் நிறைய பேர் ஏமாற்றுவார்கள், ஆனால் என்னுடன் 15 வருடங்களாக நட்பாக இருக்கும் பிரேம்நாத் மிக சிறந்தவர். அவர் சொன்னதால் தான் இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறேன். அவர் தான் இந்த படம் பற்றி என்னிடம் சொல்லி, நிச்சயம் இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெறும், நாம் வெளியிடலாம் என்றார், அதன்படி படத்தை என் ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறேன். மேலும், மூன்று படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இன்று வரை சினிமாவில் நிறைய ஏமாந்திருக்கிறேன். இருந்தாலும் நிச்சயம் ஒரு நாள் சினிமாவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். வெட்டி படம் அனைவருக்கும் பிடிக்கும். நாயகன் ராகின்ராஜ் நிச்சயம் பெரிய நடிகராக வருவார், நன்றி.” என்றார்.