பாராட்டு விழாவில் கவிஞர் முத்துலிங்கத்திற்கு பாக்யராஜ் மோதிரம் அணிவித்து மரியாதை!

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர்முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர்.
’முத்துக்கு முத்தான விழா’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
’காற்றில் விதைத்த கருத்து’ நூலின் இரண்டாவது பதிப்பும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இந்த நூலை வெளியிட விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
கவிஞர் முத்துலிங்கத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு கே.பாக்யராஜ், தலைவர், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தலைமை தாங்க, ஆர்.கே.செல்வமணி, தலைவர், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், டி.சிவா, பொதுச்செயலாளர், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், கருணாஸ், துணைத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் முத்துலிங்கத்திற்கு பாக்யராஜ் மோதிரம் அணிவித்து மரியாதை செய்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை வைஜெயந்தி பாட, லியாகத் அலிகான், பொதுச்செயலாளர், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், வரவேற்புரை வழங்கினார். நடிகைகள் பூர்ணிமாபாக்யராஜ், குட்டி பத்மினி, ரோகிணி, தேவயாணி ராஜகுமாரன், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷிணி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
கவிஞர் முத்துலிங்கம் பற்றிய குறும்படம் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றது.