Feb 08, 2025 12:21 PM

’2K லவ்ஸ்டோரி’ கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி

’2K லவ்ஸ்டோரி’ கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ்ஸ்டோரி’. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா,  படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் இயக்குநர் திரு பேசுகையில், “தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கும், இயக்குநர் சுசீந்திரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.  அவர்கள் இருவருமே எனது குடும்பம் போல் தான்.  அவர்களைப் போலவே நானும் இப்படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். தனஞ்செயன் சார் இருக்கும் அபார்ட்மெண்டில் தான் நானும் வசிக்கிறேன், தினமும் வாக்கிங் செல்லும் போது அவர் யாரிடமாவது ஃபோனில் பேசிக் கொண்டே இருப்பார், அப்படித்தான் போன் செய்து, 2K கிட்ஸ் படம் பற்றி என்னிடம் சொன்னார், முழு கதையும் அவர் அவ்வளவு ரசித்துச் சொன்னார். அதன் பிறகு சுசீந்திரன் சார் போன் செய்தபோது,  தேவாவே  சொல்லிவிட்டார் உங்கள் படத்தைப் பற்றி என்று சொன்னேன்.  அந்த அளவு இந்தத் திரைப்படம் அவரை பாதித்திருக்கிறது.  ஒரு படத்தை அவர் பாராட்டுவது அத்தனை எளிதான விஷயமில்ல, அவரே சொன்ன பிறகு நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், “இயக்குநர் சுசீந்திரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான களத்தில் கதை சொல்லுவார். இந்தப் படத்தில் 2K கிட்ஸ் பசங்களின் கதையைச் சொல்லி இருக்கிறார். இந்த கால இளைஞர்களின் வாழ்க்கையை, அவர்கள் ரிலேஷன்ஷிப்பை, அவர்கள் வாழ்க்கையை அணுகும் விதத்தை, அவர்கள் எப்படி சரியாக இருக்கிறார்கள் என்பதை, மிக அழகான கதையாகக் கோர்த்து, இந்த படத்தில் சொல்லி இருக்கிறார். முந்தைய ஜெனரேஷன் இந்த தலைமுறையைப் பார்த்து தவறாக நினைப்பார்கள், ஆனால் அதெல்லாம் இல்லை என்று,  மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் மிக அற்புதமாக இருந்தது. ஒளிப்பதிவு, இசை, இரண்டும் அட்டகாசமாக இருந்தது. படம் மிக சூப்பராக வந்திருக்கிறது, படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பேசுகையில், “இரண்டு நாட்களுக்கு முன் சுசீந்திரன் சார் எனக்கு போன் செய்து, இந்த விழாவிற்கு வர முடியுமா? என்று கேட்டார் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஸ்கூல் படிக்கும் காலத்தில் அவருடைய படங்கள் பார்த்து நிறைய விவாதித்து இருக்கிறோம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், அவர் நடிகர்களைக் கையாளும் விதம், எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில்  நடிகர்கள் நடிப்பது மாதிரியே தெரியாது, அவ்வளவு அருமையாக அவர்களைக் கையாளுவார்.  பல விஷயங்களில் அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தைக் காலை சில நண்பர்களோடு பார்த்தேன், எப்போதும் அடுத்த தலைமுறை  பற்றி நமக்குப் பெரிய அளவில் தெரியாது, ஆனால் இவர் 2K கிட்ஸ் வாழ்க்கையை மிக அற்புதமாகக் கையாண்டிருந்தார். படம் சூப்பராக வந்துள்ளது, படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஹரிஹரன் பேசுகையில், “என்னுடைய ஜோ படம் வந்தபோது, இரண்டு நாள் கழித்து ஒரு ஷோ போட்டு இருந்தோம், அப்போது படத்தின் இயக்குநர் யார் என்று விசாரித்து, என்னைத் தேடி வந்த கட்டியணைத்துப் பாராட்டினார். அப்போது இருந்தே சுசீந்திரன் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவரது படங்களுக்கு நான் ரசிகன். இந்த படத்தின் ஆரம்பத்திலிருந்து நான் இந்த படத்தை ஃபாலோ செய்து வருகிறேன். என் படத்தில் நடித்த கவின் அண்ணா அவர்கள் இந்த படத்திலும் நடித்துள்ளார். அவர் படம் பற்றிச் சிலாகித்துச் சொல்வார். படத்தை நான் பார்த்தேன் ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகச் சரியாக முடிப்பதில் சுசீந்திரன் சார் வல்லவர். ஆதலால் காதல் செய்  போன்ற அட்டகாசமான படங்களைத் தந்தவர், இந்த படத்திலும் மிக அழுத்தமான ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசுகையில், “நண்பர் சுசீந்திரன் இந்த படத்தின் டைட்டில் டிசைன் செய்த போது, எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.  அப்போதே எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இந்த தலைமுறைக்கு மிகவும் பிடித்த டைட்டில், மிகவும் பிடித்த கதை, இது அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் ஒரு நல்ல படமாக இருக்கும்.  நான் இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டேன், இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிக அற்புதமாக இருந்தது. அந்த சோஷியல் மெசேஜ், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விழாவின் நாயகன் இமான் சார், இந்த படத்தில் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இமான் சாரும் பிரபு சாலமன் சாரும் சேரும்போது, பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய ஹிட் அடிக்கும், அதே போல தான் சுசீந்திரன் சார் இமான் சார் கூட்டணி சேரும்போது, பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். இருவரின் காம்போ இன்னும் மிகப்பெரிய வெற்றிகளைத் தர வேண்டும்.  நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர், குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் எனச் சொல்வார்கள், சுசீந்திரன் சார் அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷால், சூரி என இருவரும் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்கள், அதே போல இடம் உங்களுக்கும் கிடைக்கும். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். சுசீந்திரனால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள், அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், இன்று பெரிய இடத்தில் இருக்கிறார்கள், சுசீந்திரனுக்கு என் வாழ்த்துக்கள். அதேபோல் இந்த படத்தை நம்பி வாங்கிய  தனஞ்செயன் அவர்களுக்கு எனக்கு நன்றிகள். இப்படத்தை நம்பி, புதிய அறிமுகங்களை நம்பி, தயாரித்த தயாரிப்பாளருக்கு என்னுடைய நன்றிகள். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார். 

 

இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசுகையில், “ஆபீஸ் போடாமல் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. ஆனால் ஆறு மாதத்தில் இதை இத்தனை அற்புதமாக எடுத்து முடிக்க சுசி சாரால் மட்டும் தான் முடியும். எல்லோருமே புது முகங்கள், ஆனால் அவர்களை வைத்துக் கொண்டு, மிகச் சரியாக திட்டமிட்டு, மிகக்குறுகிய காலத்தில், படத்தை முடித்து இருக்கிறார். நாயகன் ஜெகவீர், முதல் படம் காதலர் தினத்தன்று படம் ரிலீஸ் ஆகிறது, அவருக்கு எனது வாழ்த்துக்கள். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இமான் சாரின் இசை மிக அற்புதமாக வந்திருக்கிறது. என்னுடைய நடிப்பிற்கும் அவர் வாசித்திருக்கிறார் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. இத்தனை புதுமைகளை நம்பி, சுசீந்திரன் சாரின் திறமையை நம்பி,  தயாரிப்பாளர் உள்ளே வந்திருக்கிறார். நமக்கொரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார் அவருக்கு நன்றி.  படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், “இந்த படத்தில் நானும் நடித்துள்ளேன், அதனால் படத்தைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது. படத்தை நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் என்பது ஏதாவது ஒரு உணர்வை அழுத்தமாகச் சொல்ல வேண்டும், இந்தக் கால தலைமுறைக்கு ஒரு சிறு குழப்பம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது, அந்த குழப்பத்திற்கு விடை தரும் படமாக இந்த திரைப்படம் இருக்கும்.  இசையமைப்பாளர் இமான் இசை மிக அற்புதமாக வந்திருக்கிறது. புதுமுக நடிகர் ஜெகவீர் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். புகழ் பெற்ற இயக்குநர்கள் இப்படத்தை ஆதரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.  படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் செல்வ சேகரன் பேசுகையில், “இயக்குநர் சுசீந்திரனிடம், ஏன் திரும்ப புது முகங்களை வைத்து இயக்குகிறாய்? என்று கேட்டேன். இது மீண்டும் ஒரு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் போல் இருக்கும்,  நமக்கு புது மாற்றத்தைத் தரும் என்று சொன்னார். நல்லபடியாக செய் என்று வாழ்த்தினேன், படம் நன்றாக வந்துள்ளதாக, அனைவரும் பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில், “என்னுடைய நண்பர் ஜெகவீர் அவருடன் வேறு ஒரு ப்ராஜெக்ட் செய்வதற்காக ஒரு வருடம் டிராவல் செய்து உள்ளேன், அவரின் உழைப்பு, ஆர்வம் பற்றி எனக்குத் தெரியும். இந்தத் திரைப்படம் அவருக்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகத்தைத் தரும். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இன்றைய விழாவின் நாயகன் இமான் ஒரு நல்ல இசை இல்லாமல் ஒரு நல்ல கதையை உங்களால் சொல்லவே முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு நம் வாழ்க்கையை, மண் சார்ந்து நம் படங்கள் பிரதிபலிக்கிறதோ அந்தளவு நம் படங்கள், உலகத் திரைப்படங்களாக உலகிற்குத் தெரியும். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, இன்றைய சினிமா உலகில் முதலில் பாசிடிவாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் தான்.  நம் மண்ணின் கதையைச் சொல்ல வேண்டும் என நினைத்து, அதை மிக அழகாக இந்த திரைப்படத்தில் சொல்லி  இருக்கிறார்.  அந்த துணிச்சலுக்கு சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களைப் போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த இடத்தை இந்தத்  திரைப்படம் நிறைவு செய்யும். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் மிக அருமையாகத் திரைக்கதையை எடுத்துச் சென்றுள்ளீர்கள், நடித்த நடிகர்கள் அனைவரும், மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். யாருமே தனியாகத் தெரியவில்லை, அந்தந்த பாத்திரங்களாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள். இன்றைய தலைமுறையைப் பற்றி மிக அழுத்தமான ஒரு விஷயத்தை, மிகத் தைரியமாகப் பேசியிருக்கிறார். காதல் தாண்டி, நாயகனும் நாயகியும் நண்பர்களாக இருக்க முடியுமா? என்ற ஒரு விஷயத்தை இந்த திரைப்படம் பேசுகிறது. இதை முன்பே எனது இயக்குநர் அகத்தியன் சார் தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்தில் பேசி இருந்தார். கதாநாயகினும் கதாநாயகனும்  சந்திக்காமல் ஒரு காதல் கதை எடுத்தார். அது இந்தியாவையே புரட்டிப் போட்டது. அதே போல் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசுகையில், “City light pictures தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். சுசீந்திரன் சார் மீதான நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. சொன்னது போல 40நாளில் இப்படத்தையே முடித்து விட்டார். ஜெகவீர் என் நண்பர் அவர் மூலம் தான் சுசி சார் அறிமுகம். 2கே ஜெனரேஷனை நெகடிவாக காட்டுகிறார்கள் ஆனால் சுசி சார் மிக அருமையாக இதைக் கையாண்டுள்ளார். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார்.  அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய சுசி சாருக்கு நன்றி.  இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் இமான் பேசுகையில், “இந்த திரைப்படத்தை இன்று காலை பார்த்த அத்தனை முக்கியமான இயக்குநர்களுக்கும், அவர்களுடைய நேரத்தை செலவிட்டு, இப்படம் பார்த்துப் பாராட்டிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இத்தனை குறுகிய காலத்தில், ஒரு திரைப்படத்தைத் திட்டமிட்டு, அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடிக்கக் கூடிய, ஒரே இயக்குநர் சுசீந்திரன் சார் மட்டுமே, அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உடலாலும், மனதாலும், பலத்தாலும் மிக நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் பல நண்பர்கள் உள்ளனர், அதில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.  இந்த திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார். 

 

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “திட்டமிடலில் சுசீந்திரன் சாரை மிஞ்ச முடியாது, இந்த விழாவையே சரியாக ஒரு மணிக்குத் திட்டமிட்டு இருந்தார், திடீரென போன் செய்து, 12:30 மணிக்கு ஆரம்பித்து விடலாம் என்றார். எல்லோரையும் வரவைத்து ஸ்கிரீனில் பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது, இங்கு மேடையை ஒருங்கிணைத்தார், அவரின் இந்த திட்டமிடல் தான், அவரிடம் இருக்கும் சிறப்பு. ஒரு படத்தை எப்படி மிகக் குறுகிய காலத்தில் முடிக்க முடியும் என்பதை, அவரிடம் கற்றுக் கொள்ளலாம். ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, படத்தின் செலவினங்களை இழுத்து விட்டு, இறுதியில் படத்திலும் ஒன்றும் இல்லாமல், செலவையும் அதிகமாக்கிவிடும் இயக்குநர்கள் இந்த காலத்தில் இருக்கிறார்கள். ஆனால் அதை உடைத்துத் திட்டமிடலில் சாதித்த காட்டுகிறார் சுசீந்திரன்.  ஒரு பக்கம் இந்த விழா நடந்து  கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் கல்லூரியில் படத்தை விளம்பரம் செய்கிறேன் என்று சொன்னார். அவரின் இந்த ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்தது, ஒரு இயக்குநர் இறங்கி வேலை செய்யும்போது ,எப்போதும் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும், நான் அவர் எது சொன்னாலும் ஓகே சொல்லிவிடுவேன். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், சுசீந்திரன் சாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பீர்கள். ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது மிக எளிது, ஆனால் அதை வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடினம், அதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.” என்றார். 

 

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப்படம் தந்துள்ளது, இந்தப்படத்தை என் நெருங்கிய நண்பர்கள் இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டினேன்  பார்த்து விட்டு வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி. புதுமுகமாக அறிமுகமாகும் ஜெகவீருக்கு வாழ்த்துக்கள், துஷ்யந்த் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள், மீனாக்ஷிக்கு வாழ்த்துக்கள், அனைத்து நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் விக்னேஷுக்கு நன்றி, இப்படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். 

 

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.