ரஜினிகாந்துக்கு 60 லட்சம் மாணவர்கள் ஆதரவு!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் சர்வதேச சமூக சேவை மையத்தில் இருக்கும் 60 லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று, அந்த அமைப்பின் தலைவரும், நடிகருமான கோல்டு ஸ்டார் கோபி காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோபி காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மையத்தில் உள்ள அறுபது லட்சம் மாணவர்களும், இளைஞர்களும் ஆதரவு அளிப்போம். ரஜினிகாந்த் சாதாரண பஸ் நடத்துனராக இருந்து இன்று தனது ஸ்டைல், நடிப்பால் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இதற்காக ரஜினிகாந்த் எண்ணற்ற அவமானங்களையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும் கடந்து இன்று திரைப்படத் துறையில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார். இதற்கு பின்னால் தமிழக மக்களும், அவருக்காக நின்று அவருடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் மாபெரும் வெற்றி பெறச் செய்து அவரை உச்சத்தில் ஏற்றி ஜொலிக்க வைத்துள்ளார்கள். அவர்களுக்கு கைமாறு செய்யும் விதமாக கண்டிப்பாக அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
ரஜினிகாந்த் இவ்வளவு கஷ்டங்களையும் கடந்து வந்துள்ளதால் கண்டிப்பாக ஏழை, எளிய மக்களின் கஷ்டங்கள் நன்கு அவருக்கு தெரியும். ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் திட்டங்களை தீட்டி அனைத்து வித மக்களுக்கும் நன்மை செய்வார். ஆகையால் ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மையத்தில் உள்ள தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்தியா, இலங்கை, நேபாளம், சீனா உள்ளிட்ட பிற நாடுகளிலும் உள்ள அறுபது லட்சம் மாணவர்களும், இளைஞர்களும் ஆதரவு தந்து ரஜினிகாந்த் அவர்களை தமிழக அரசியலில் காமராஜர் ஐயா ஆட்சியை கொண்டு வரும் நிலைக்கு ரஜினிகாந்த் அவர்களுக்கு உதவிக் கைகளாக நிற்போம். அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.