’800’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்திற்கு ‘800’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி முரளிதரன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில், தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இதற்கிடையே, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். மஹிமா நம்பியார் மதிமலராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டு வெளியான ‘கனிமொழி’ படத்தை இயக்கிய ஸ்ரீபதி, இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முத்தையா முரளிதரனின் பிறந்தநாளான ஏப்ரல் 17 ஆம் தேதி ‘800’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டது. போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விவேக் ரங்காச்சாரி தயாரித்துள்ள இப்படம் இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக விதேஷ் பணியாற்றுகிறார்.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பின்னணி பணிகளில் படக்குழு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் ‘800’ திரைப்படம் இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.