தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ‘ஜவான்’ சிறப்பு காட்சி திரையிடல்!
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தற்போது வரை இந்தியாவின் பல பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரூ.950 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் ‘ஜவான்’ இன்னும் ஒரு சில நாட்களில் ரூ.1000 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் ஷாருக்கானின் மீர் அறக்கட்டளை பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ‘ஜவான்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திரையிடல் குறிப்பாக பின் தங்கிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஷாருக்கானின் #AskSRK அமர்வின் போது, ஷாருக்கான் தனது அறக்கட்டளையின் பணிகள் குறித்து பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். இது பற்றி மேலும் அவரிடம் கேட்டபோது, ”நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம். மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த நம்மால் முடிந்தவரை பலருக்கு உதவுகிறோம். அதைப் பற்றி பேச வேண்டியதில்லை. ஆனால் மிகவும் உற்சாகமாக அவர்களிடத்தில் 'ஜவான்' திரைப்படத்தை திரையிடுமாறுச் சொன்னேன். இந்த வாரம் முழுவதும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் 'ஜவான்' திரைப்படம் திரையிடப்படும்” என பணிவுடன் பதிலளித்தார் ஷாருக்கான்.
ஷாருக்கானின் மீர் அறக்கட்டளையில் அமில வீச்சில் உயிர் பிழைத்தவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், வீதியோர குழந்தைகள், குடிசை வாழ் மக்கள், பழங்குடியின குழந்தைகள், மாற்று திறனாளிகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
பல நபர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலானவர்களுக்கு இது அவர்களின் முதல் திரையரங்க வருகையாகவும் இருந்தது. இதன் விளைவாக அவர்களிடத்தில் மகிழ்ச்சியான புன்னகையும் பூத்தது.
மகிழ்ச்சி மற்றும் மனதை கவரும் தருணங்களை தொடர்ந்து பரவ செய்வதற்காக, ஷாருக்கானின் மீர் அறக்கட்டளை - நாடு முழுவதும் இதே போன்ற சிறப்பு திரையிடல்களை இந்த வாரம் முழுவதும் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.