சசிகுமார் படத்திற்காக கிழக்கு கடற்கரை சாலையில் போடப்பட்ட பிரம்மாண்ட செட்!

சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90-களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் நடிக்கிறார். இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், கே.ஜி.எப் மாளவிகா, போஸ் வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்கும் இப்படத்தை, விஜயகணபதிஸ் பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிக்கிறார. என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த்.என்.பி படத்தொகுப்பு செய்கிறார்.
90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவரப் படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. 90 களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.
தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராம், முதல் முறையாக விஜயகணபதிஸ் பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரிக்கிறார்.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படப்பின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு, டீசர் மற்றும் டிரைலர் பற்றிய அறிவிப்புகளை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.