Oct 15, 2024 07:08 AM

குடும்பத்தோடு பார்க்க கூடிய கலகலப்பான படம்! - ‘கருப்பு பெட்டி’ படத்தை பாராட்டிய தணிக்கை குழு

குடும்பத்தோடு பார்க்க கூடிய கலகலப்பான படம்! - ‘கருப்பு பெட்டி’ படத்தை பாராட்டிய தணிக்கை குழு

தமிழ் சினிமாவின் தற்போதைய காலக்கட்டத்தில் வெளி வரும் படங்கள் அனைத்தும் அடிதடி, கொலை என்று ஒரு பக்கம் இரத்தம் தெறிக்க மறுபக்கம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்ற பெயரில் கொடூரமான காட்சிகளை வைத்து மக்களை வாட்டி வதைக்கிறார்கள். இதனால், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம் திரையரங்கிற்கு வருவது குறைந்திருக்கும் நிலையில் அத்தகைய ரசிகர்களை மனதில் வைத்து குடும்பத்தோடு பார்த்து மகிழும்படியான ஒரு படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார்கள் ‘கருப்பு பெட்டி’ படக்குழுவினர்.

 

படத்தின் தலைப்பு ‘கருப்பு பெட்டி’ என்று இருப்பதோடு, படத்தின் போஸ்டர்களில் நாயகனும், நாயகியும் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் நின்றுக் கொண்டிருப்பதால் ஏதோ சீரியஸான படம் என்று நினைத்து விட வேண்டாம். முழுக்க முழுக்க கலகலப்பான ஒரு படமாகவும், குடும்பத்தோடு பார்க்க கூடிய பொழுது போக்கு படமாகவும் உருவாகியிருக்கிறது இந்த ‘கருப்பு பெட்டி’.

 

‘பில்லா பாண்டி’ படம் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக களம் இறங்கியதோடு, அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து நடிகராகவும் கவனம் ஈர்த்த கே.சி.பிரபாத், ‘கருப்பு பெட்டி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘அங்காரகன்’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்திய கே.சி.பிரபாத், தற்போது ‘யாமம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில், ‘கருப்பு பெட்டி’ படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்திருப்பதால் அடுத்தடுத்த படங்கள் மூலம் கோடம்பாக்கத்தின் கவனம் ஈர்க்கும் ஹீரோவாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜேகே பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பி. மிதுன் சக்ரவர்த்திதயாரித்துள்ள இப்படத்தை எஸ்.தாஸ் இயக்க, கே.பி.பிரபாத்துக்கு ஜோடியாக தேவிகா வேணு நடித்திருக்கிறார். இவர்களுடன் சரவண சக்தி, சித்தா ஆர்.தர்ஷன், தேவிகா வேணு, அனிதா, கீர்த்தி, நிஷா, சர்மிளா, கண்ணன், ராஜதுரை, சிற்றரசு, காமராஜ், சாய் வைரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

அருண் இசையமைக்க, சிற்றரசு பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்.மோசச் டேனியல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலசிவா படத்தொகுப்பு செய்துள்ளார். திவாகர் கலை இயக்குநராக பணியாற்ற ரவி ராஜா சண்டைக்காட்சிகளையும், மாஸ்டர் சக்ரவர்த்தி நடனக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.

 

படம் பற்றி இயக்குநர் எஸ்.தாஸ் கூறுகையில், “குடும்பஸ்தனான நாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சினை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதுதான் படம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம். மனரீதியான பிரச்சினை ஒன்றை இதில் பேசியிருக்கிறோம். விமானத்துக்கும், அதன் இயக்கத்தையும் பதிவு செய்கிற கருவி கருப்பு பெட்டி. அதே போன்று இந்தக் கதையிலும் கருப்பு பெட்டி போன்ற முக்கியமான ஒன்றுதான் கதையில் ட்விஸ்ட்டாக இருக்கிறது. அதனால் இந்தத் தலைப்பை வைத்துள்ளோம். 2 மணி நேர படம் தான். படம் பார்க்க வரும் பார்வையாளர் மனம் விட்டு இரண்டு மணி நேரம் சிரித்து வீட்டு போகலாம். ஏனென்றால் படம் திரையில் ஓடும் நேரமும் இரண்டு மணி நேரம் தான்.” என்றார். 

 

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருக்கும் ’கருப்பு பெட்டி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 5 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை கடந்து சமூக வலைதளங்களில் வைரலாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான படம் என்று தணிக்கை குழுவினரால் பாராட்டப்பட்டிருக்கும் ‘கருப்பு பெட்டி’ வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.