நாயகன் அவதாரம் எடுத்த ‘ஆடுகளம்’ முருகதாஸ்!
விஜயின் ‘கில்லி’ திரைப்படத்தில் ஆதிவாசி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் முருகதாஸ். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், ‘புதுப்பேட்டை’, ‘காஞ்சிவரம்’, ‘மெளனகுரு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நிலையில் ‘ஆடுகளம்’ திரைப்படம் இவருக்கு அடையாளமாக அமைந்தது.
இதையடுத்து, ‘விசாரணை’, ‘96’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த ஆடுகளம் முருகதாஸ், ‘பியாலி’ என்ற படம் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார்.
பிஸியான குணச்சித்திர நடிகராக வலம் வரும் ஆடுகளம் முருகதாஸ், தற்போது கதையின் நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். ’ராஜாமகள்’ என்ற திரைப்படத்தின் கதையின் நாயகனாக முருகதாஸ் நடித்து வருகிறார்.
நடுத்தர குடும்ப தந்தைகள் தங்களது பிள்ளைகள் ஆசைப்பட்டத்தை வாங்கிக்கொடுக்க முடியாமல் தவிப்பதையும், தந்தை மகள் இடையிலான பாசப்போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஹென்றி இயக்குகிறார். க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் சார்பில் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிக்கிறார்.
படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆடுகளம் முருகதாஸ் நடிக்க, அவரது மனைவியாக ’கன்னிமாடம்’ புகழ் வெலினா நடிக்கிறார். இவர்களுடன் பக்ஸ் பகவதி, பேபி பிரிதிக்சா, ஈஸ்வர், மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, ராம், விஜய்பால உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிக்கி கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்திருக்கிறார். மணிஅமுதவன் பாடல்கள் எழுத, சி.எஸ்.பிரேம்குமார் மற்றும் பி.அஜித்குமார் படத்தொகுப்பு செய்கின்றனர்.
சென்னை சுற்றுவட்டாரம், மகாபலிபுரம், திருத்தணி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து டீசர் மற்றும் பாடல்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.