3 மாநில விருதுகளை வென்ற குறும்பட இயக்குநர் தர்மா இயக்கத்தில் உருவாகும் ‘ஆகக்கடவன’!
சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பில் அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் படம் ‘ஆகக்கடவன’. அறிமுக இயக்குநர் தர்மா இயக்கும் இப்படத்தில் புதுமுக நடிகர் ஆதிரன் சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் வந்த சில குறும்படங்களில் நடித்திருப்பதோடு, ‘அட்ட கத்தி’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். வின்செண்ட், சி.ஆர்.ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா, நிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் தர்மா, சென்னை திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்றதோடு, இவர் திரைப்படக் கல்லூரியில் இயக்கிய குறும்படம் ஒன்று மூன்று மாநில விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லியோ வெ.ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாந்தன் அன்பழகன் இசையமைத்திருக்கிறார். சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர். விக்கி பாடல்கள் எழுத, வல்லவன் மற்றும் விக்கி பாடியிருக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநர் தர்மா கூறுகையில், ”எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள், ஆனால் நானோ நாம் பேசும் சொற்களை பொருத்தும் நம் வாழ்க்கை அமையும், என்பேன். அதாவது, ஒருவர் வாயிலிருந்து வரும் வார்த்தையே அவர் வாழ்வின் நன்மை, தீமையை தீர்மானிக்கும். ஆம் ஒருவர் நன்மையானவற்றை பேசினால் அவர் வாழ்வில் நல்லதே நடக்கும் இதுவே எதிர்வினைக்கும் பொருந்தும் என்பதே பிரபஞ்ச விதி, இதை மையமாகக் கொண்டுதான் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு இயல்பாக நடிக்க கூடிய புதுமுக நடிகர்கள் தேவைப்பட்டார்கள் அவர்களின் இயல்பான நடிப்பாலும் விறு விறுப்பான திரை கதையாலும் இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை தரும்.” என்றார்.
சென்னை குன்றத்தூர், கள்ளக்குறிச்சி, தலைவாசல், சின்ன சேலம், சிறுவாச்சூர், கல்லாநத்தம், தகரை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவது முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.