Nov 19, 2017 10:49 AM

மயானத்தில் மலர்ந்த காதலை சொல்லும் ‘ஆறடி’!

மயானத்தில் மலர்ந்த காதலை சொல்லும் ‘ஆறடி’!

ஸ்ரீ சிவகுடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார், எஸ்.சுமதி, டாக்டர் எஸ்.மோகனவேல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறடி’. சந்தோஷ்குமார் இயக்கும் இப்படத்தில், விஜயராஜ், தீபிகாரங்கராஜ், ஜீவிதா, டாம்பிராங், சாப்ளின் பாலு, பெஞ்சமின், சேலம் டி.சண்முகம், சிபிபத்ரிநாத், தினேஷ், சுமதி, காஞ்சனா, தனலட்சுமி, பிரியா, சுப்புராஜ், ஜெயமணி, சிகாமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

அபிஜோஜோ இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஆர்.கே.விஜயன் ஒளிப்பதுவு செய்துள்ளார். ஆரூர் தமிழ்நாடன், கண்ணன் பார்த்திபன், அபிஜோஜோ, கோமல்தாசன் ஆகியோர் பாடல்கள் எழுத, திப்பு, மால்குடி சுபா, அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர். சேலம் டி.சண்முகசுந்தரம், என்.துரைராஜ், பத்மாவதி சந்தோஷ்குமார் ஆகியோர் இணை தயாரிப்பை கவனிக்க, என்.துரைராஜ் தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்துள்ளார். எஸ்.நவீன்குமார் கலைத்துறையை கவனித்துள்ளார். சேலம் டி.சண்முகசுந்தரம் நிர்வாக தயாரிப்பை கவனித்துள்ளார்.

 

இபடத்திற்கு எடிட்டிங் செய்ததோடு படத்தையும் இயக்கியுள்ள சந்தோஷ்குமார், பல குறும்படங்களை இயக்கி பல விருதுகளை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள சக்திவேல் படம் குறித்து கூறுகையில், “எட்டு கால் பயணத்தில் மனித இனம் செல்வது மயானம் தான். அந்த சூழ்நிலையும் இடமும் எவ்வாறு இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். அப்படிப்பட்ட இடத்தில் ஒரு காதல் உதயமாகிறது.

 

அன்று மயானத்தை ஆண்ட அரிச்சந்திரனும் அவனது குடும்பமும் எப்படிப்பட்ட துயரங்களில் இருந்தார்கள்.

“உனக்கேது சொந்தம்...எனக்கேது சொந்தம்...உலகத்தில் எது தான் சொந்தமடா....” என்ற பாடலும் “வீடி வரை உறவு...வீது வரை மனைவி...காடு வரை பிள்ளை...கடைசி வரை யாரோ...” என்ற பாடல் வரிகளில் உள்ள தத்துவங்களை மிக எளிமையாக கதையாக்கி, இதுவரை ஆண்கள் மட்டுமே மயானத்தில் வெட்டியான் வேலை பார்த்து வருவதை கருத்தில் கொண்டு அதை மாற்றி மயானத்தில் ஒரு பெண் வெட்டியான் வேலை செய்தால், அதனால் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களை திரைக்கதையாக்கி ‘ஆறடி’ படத்தை உருவாக்கி உள்ளோம்.” என்று தெரிவித்தார்.