’சீதா பயணம்’ மூலம் மீண்டும் இயக்குநர் பயணத்தை தொடங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்!
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வரும் அர்ஜுன், நடிகராக மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர். நாயகனாக நடித்து வந்தவர் தற்போதைய தலைமுறை ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி வருவதோடு பல வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அர்ஜுன் மீண்டும் இயக்குநராக களம் இறங்குகிறார். தனது பாணியிலான ஆக்ஷன் படமாக அல்லாமல், மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான கதையோடு தனது இயக்குநர் பயணத்தை மீண்டும் தொடங்கும் அர்ஜுன் தான் இயக்கப் போகும் படத்திற்கு ‘சீதா பயணம்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
சீதா என்ற கதாபாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.
சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வு ரீதியாக மிக அழுத்தமான தைரியமான பாத்திரம், இப்பாத்திரத்தில் தன் தனித்துவமான நடிப்பின், முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரது பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஐஸ்வர்யாவின் பாத்திரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், அவரது தந்தை ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இப்படத்தை ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பில் தயாரித்து இயக்குகிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் தனது அற்புதமான பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை வெல்லவும் தயாராகி வருகிறார்.
சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.