57 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்க்கு கிடைத்த அங்கீகாரத்தை கொண்டாடும் நடிகர் மற்றும் இயக்குநர் கணேஷ்பாபு!

’சிவகாசி’, ‘ஆட்டோகிராப்’, ‘புதிய கீதை’, ‘மொழி’, ’ஆனந்தபுரத்து வீடு’ உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து நடிகராக கவனம் ஈர்த்த இ.வி.கணேஷ்பாபு, வெள்ளித்திரையில் மட்டும் இன்றி சின்னத்திரையிலும் பல முன்னணி தொடர்களில் நடித்து தமிழக மக்களிடம் பிரபலமடைந்தார். ரசிகர்களிடம் மட்டும் இன்றி இலக்கிய உலகத்திலும் பிரபலமான இவர், கவிதை தொகுப்புகள் மற்றும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
இலக்கியம் தெரிந்த நடிகராக வலம் வந்த இ.வி.கணேஷ்பாபு, ’யமுனா’ மற்றும் ‘கட்டில்’ ஆகிய படங்கள் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தற்போதும் நடிப்பு மற்றும் இயக்கம் என்று தொடர்ந்துக் கொண்டிருப்பவர் ‘கட்டில்’ படம் மூலம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று அங்கீகாரம் பெற்றார்.
இந்த நிலையில், நடிகர் மற்றும் இயக்குநராக தனக்கு கிடைத்த அங்கீகாகரத்தால் எந்த அளவுக்கு இ.வி.கணேஷ்பாபு மகிழ்ச்சியடைந்திருக்கிறாரோ, அதை விட அதிகமான மகிழ்ச்சியில் தற்போது இருக்கிறார். அதற்கு காரணம் 71 வயதாகும் அவருடைய தாயார் விஜயலெட்சுமிக்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் 1967 அம் ஆண்டு அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்றபோது படிப்பை தொடர முடியாமல் இடைநின்றார் விஜயலெட்சுமி. அவர் இடைநின்று 57 ஆண்டுகள் கடந்த நிலையில், பள்ளி மாற்றுச்சான்றிதழுக்கு (TC) விண்ணப்பித்து அதற்கான முக்கிய சான்றுகளையும் சமர்ப்பித்தார். பள்ளி நிர்வாகம் ஆவணங்களை சரிபார்த்து, கந்தர்வக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெ. பழனிவேல் சான்றிதழை வழங்கினார். வாழ்வின் பொக்கிஷமாக இதை பாதுகாப்போம் என்றார் 71வயதை தொட்ட விஜயலெட்சுமி.
இவர் வேறு யாருமல்ல, நடிகர் மற்றும் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவின் தாயார் தான். இவருடைய இத்தகைய செயல் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், இவர் நடிகர் மற்றும் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவின் தாயார் என்று தெரிந்ததும், திரையுலகினரும் விஜயலெட்சுமி அவர்களை மட்டும் இன்றி, தற்போதைய பரபரப்பான காலக்கட்டத்தில் தனது தாய்க்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை கொண்டாடி வரும் நடிகர் மற்றும் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவையும் பாராட்டி வருகிறார்கள்.
தனது தாய்க்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரத்தால் ஒரு மகனாக பெருமைப்படும் இ.வி.கணேஷ்பாபு, தனது தாயார் 8ம் வகுப்பு படிக்கும் போது அரையாண்டு விடுமுறையில் கிருஷ்ணர் வேடமிட்ட புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படம் தற்போது டிஜிட்டல் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.