என்னை நிரூபிப்பதற்கான படம் ‘நித்தம் ஒரு வானம்’ - அசோக் செல்வன் நெகிழ்ச்சி
அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’. வயாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணந்து தயாரிக்கும் இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டை தொடர்ந்து இயக்குநர் ரா.கார்த்திக், நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சாகர் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
படம் குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறுகையில், “இந்த கதையை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். மிக சிறப்பான கதை. காதல் படம் அல்ல, ஆனால் காதல் இருக்கிறது. வாழ்க்கையில் காதல் மட்டும் அல்ல அதையும் தாண்டி பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது என்பது உணர்த்தும் படம்.
‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு படத்தை மீண்டும் எப்போது தருவீர்கள் என்று என்னை பலர் கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கான பதில் தான் ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம். என் சினிமா வாழ்க்கையில் மீண்டும் ஒரு சிறந்த படமாக இந்த படம் இருக்கும்.
இந்த படத்தில் மூன்று கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். நான் முதல் முறையாக இப்படி கதாப்பாத்திரங்களில் வேறுபாடு காட்டி நடித்திருப்பது எனக்கு சவாலாக இருந்தது. மூன்று கதாபாத்திரங்களுக்கும் உடல் அமைப்புகளில் மட்டும் அல்ல நடிப்பிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டியிருப்பேன்.
இப்படி ஒரு படம் அனைத்து நடிகர்களும் தங்களுக்கு அமைய வேண்டும், என்று நினைக்கும் விதத்தில் இந்த கதை இருக்கிறது. எனக்கு இந்த கதை இவ்வளவு சீக்கிரம் அமைந்தது மகிழ்ச்சி. இந்த கதையை கேட்டவுடனே எனக்கு தோன்றியது ஒவ்வொரு நடிகரும் தங்களை நிரூபிப்பதற்கு ஒரு கதை கிடைக்கும், அப்படி என்னை நிரூபிக்க எனக்கு கிடைத்த கதை தான் ‘நித்தம் ஒரு வானம்’.” என்றார்.
இயக்குநர் ரா.கார்த்திக் கூறுகையில், ”’நித்தம் ஒரு வானம்’ வெறும் காதல் படமாக மட்டும் இருக்காது. அதையும் தாண்டி பல சுவாரஸ்யங்கள் கொண்ட ரசிக்க வைக்கும் பீல் குட் படமாக இருக்கும்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் படங்களும், விளம்பர படங்களுமாக பணியாற்றிய அனுபவத்தில் இந்தப் படத்தின் கதையை முதலில் எழுதி முடித்தேன். இந்தப் படத்துக்காக இந்தியாவின் பல பகுதிகளில் மட்டுமல்ல, இமயத்தில் மிக உயரமான இடத்தில் சாலை அமைந்த ரோத்தாங் பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.
ஆனால் கதையை எழுதும்போது இங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்துவோம் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் இதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்காக படத் தயாரிப்புக்கு முன்னரே நான் சில மாதங்கள் இந்த கதை நடக்கும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தேன். அதற்குப் பிறகுதான் அந்த இடங்களில் எல்லாம் படப்பிடிப்பை நடத்துவது என்று தீர்மானித்தோம். அது படத்தின் திட்டமிடுதலை சரியாக செய்வதற்கு உதவியது.
அதன் பிறகுதான் இந்த கதைக்கு எந்த ஹீரோ சரியாக இருப்பார் என்று யோசித்து அசோக்செல்வனிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையை எழுதி முடித்தது 5 வருடங்களுக்கு முன்னால் என்றால் இதை அசோக் செல்லுனிடம் மூன்று வருடங்களுக்கு முன்பே சொல்லி இருந்தேன்.
அதற்குள் லாக் டவுன் போன்ற காரணங்களால் படத்தை நகர்த்த முடியாமல் போக தயாரிப்பாளர் சாகரிடம் கதையைச் சொன்னபோது அவர் உடனே தயாரிக்க ஒப்புக்கொண்டார். இதில் அசோக்செல்வன் மூன்று விதமான கதாபாத்திரங்களில் வருகிறார். அவரது ஜோடிகளாக ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார்கள்.
ஒரு பீல் குட் படமாக இருந்தாலும், அதி எப்படிப்பட்ட வித்தியாசங்களை காட்டுவது, ரசிகர்களுக்கான எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி படத்தில் திருப்புமுனை என்று படம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்கும். படத்தை பார்த்துவிட்டு வெளியே போகிறவர்களுக்கு வாழ்க்கையின் மீது புதிய தன்னம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும்.” என்றார்.
படத்தை தயாரித்த சாகர், “இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் படித்து முடித்ததுமே இந்த படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. அத்துடன் கார்த்திகை என்னுடைய அலுவலகத்திற்கு கூப்பிட்டு இந்த படத்தின் நரேஷன் கேட்டேன் அவர் சொன்ன விதம் இன்னும் நம்பிக்கையே ஏற்படுத்த இந்த படத்தை தயாரிக்க முடிவெடுத்தேன்.
இந்தப் படத்துக்காக இயற்கையே எங்களுக்காக ஒத்துழைத்தது என்றால் அது மிகையில்லை. பனி படர்ந்த ரோத்தங் பகுதிகளில் படம் பிடிக்க வேண்டும் என்று கார்த்திக் சொன்னபோது காலநிலை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் நாங்கள் அங்கு போய் சேர்ந்தோம்.
ஆனால் அப்போது அங்கு பனி இல்லாமல் வெயிலாக இருந்தது. பனிக்காகத்தான் அவ்வளவு தூரம் பயணப்பட்டோம் என்றாலும் அடுத்த நாள் சூட்டிங் எப்படி நடத்துவது என்று தெரியாமல் அன்று இரவு படுத்து தூங்கினோம். அடுத்த நாள் காலையில் ஆச்சரியமாக பனி மழை பெய்து கொண்டிருந்தது. அந்த இடமெல்லாம் பனியாக ஆனதுடன் கதையில் இல்லாத பனிமழையும் சேர்ந்து கொள்ள காட்சி அவ்வளவு சிறப்பாக அமைந்தது.
அதேபோல் மழை வரவேண்டிய ஒரு காட்சியில் செயற்கை மழைக்காக நாங்கள் தண்ணீர் லாரிகளையெல்லாம் தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் படமாக்கப்பட்ட போது நிஜமழையே வந்து எங்களை ஆனந்தத்தில் நினைத்தது.
இப்படி இயற்கையே ஈடு கொடுத்த இந்தப் படத்தை நிச்சயம் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயமும் இல்லை. அதுமட்டும் அல்ல, இந்த படத்தை நாங்கள் சுமார் 200 பேர் கொண்ட குழுவினருக்கு போட்டு காண்பித்தோம். அப்போது அவர்கள் படத்துடன் ஒன்றிவிட்டதோடு, சில பெண்கள் சந்தோஷத்தில் கண்ணீர் விடவும் செய்தார்கள். அந்த அளவுக்கு இந்த கதை மக்களை எளிதில் ஈக்கும் தன்மை உடையது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவர்வதோடு, அவர்களுக்கான ஒரு சிறந்த அனுபவமாகவும் இருக்கும்.” என்றார்.