காணாமல் போன ‘ஹாஸ்டல்’! - கவலையில் அசோக் செல்வன்
நடிகர்கள் யார் நடித்தாலும், படம் நன்றாக இருந்தால் தான் மக்களிடம் வரவேற்பு பெறும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு படம் தியேட்டரில் வெளியாகப் போகிறது, என்பது மக்களுக்கு தெரிந்தால் தானே தியேட்டருக்கு வருவார்கள். அல்லது அந்த படம் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தானே படத்தை பார்க்க வேண்டும், என்ற ஆர்வம் மக்களிடம் ஏற்படும். இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான ‘கே.ஜி.எப் 2’ படத்தை சொல்லலாம். அப்படத்திற்கு செய்யப்பட்ட விளம்பரமே அப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம், என்று சொல்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் சில படங்களுக்கு நல்ல முறையில் விளம்பரம் செய்யப்பட்டாலும், பெரும்பாலான படங்களுக்கு அத்தகைய விளம்பரம் செய்யப்படுவதில்லை என்பதோடு, கண் துடைப்பாக இருக்கும் புரோமோஷன் ஏஜெண்ட்கள் மூலம் செய்யப்படும் ட்விட்டர் விளம்பரங்களை நம்புவதும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒரு விளம்பர ஏஜெண்ட் மூலம் புரோமோஷன் பணிகள் செய்யப்பட்ட ‘ஹாஸ்டல்’ படம் தற்போது பெரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர் என்று முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், இந்த படத்தின் அட்வாஸ் புக்கிங் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை பெரிதாக டிக்கெட் முன்பதிவுகள் நடக்காததால் தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மன்மதலீலை’ மூலமும் வெற்றிக் கொடுத்த நடிகர் அசோக் செல்வன், ‘ஹாஸ்டல்’ மூலம் ஹாட்ரிக் வெற்றி கொடுக்கலாம் என்று பெரும் கனவோடு இருந்த நிலையில், அப்படத்தின் முன்பதிவின் நிலையை கண்டு நிச்சயம் கவலை அடைந்திருப்பார்.
அதே சமயம், ‘காத்துவாக்கு ரெண்டு காதல்’ படம் முன்பதிவிலேயே ஹவுஸ் புக் காட்சிகளாகியிருப்பதோடு, அதிகாலை 4 மணி காட்சிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வாரம் வெளியாகும் படங்களில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, மற்ற படங்கள் எல்லாம் காணாமல் போகும் நிலையில் தான் அப்படங்களின் முன்பதிவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.