Oct 26, 2024 05:59 PM

’கங்குவா’ விழாவில் விஜயை சீண்டிய நடிகர் போஸ் வெங்கட்!

’கங்குவா’ விழாவில் விஜயை சீண்டிய நடிகர் போஸ் வெங்கட்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இந்திய அளவில் எதிர்பார்ப்பு மிக்க திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள இப்படம் நவம்பர் மாதம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், “நான் சொல்வது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் பொருளாதார ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் நீங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்லலாம், என்று இயக்குநர் சிவா என்னிடம் சொன்னார், அப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். நாயகி திஷா பதானியிடம் கைகொடுக்குமாறு என் மகள் சொன்னார், அதன்படி நான் அவரிடம் கை கொடுத்து விட்டேன், அதனால் இன்று எனக்கு என் வீட்டில் நல்ல மரியாதை கிடைக்கும்.

 

கமல் சாருக்கு பிறகு தான் நடிக்கும் படத்திற்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் அதிகம் மெனக்கெடுபவர் சூர்யா. அவரது உழைப்பு தான் அவரை இவ்வளவு பெரிய உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. நான் தற்போது பல இடங்களில் அரசியல் பேசுகிறேன், அதனால் இந்த இடத்திலும் அரசியல் பேச விரும்புகிறேன்.

 

ஒரு நடிகர் என்றால் தன் ரசிகர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும், அது இந்த அரங்கத்தில் சிறப்பாக இருப்பதை பார்க்கும் போதே சூர்யாவின் ரசிகர்களின் ஒழுக்கம் தெரிகிறது. அதேபோல், ரசிகர்களுக்கு தர்மம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும், மக்களின் பிரச்சனைகளை கவனித்து அதனை தீர்க்கும் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும், அவர்களுக்கு அறிவை கொடுக்க வேண்டும், பிறகு தான் அரசியலுக்கு வர வேண்டும். அந்த வகையில், நடிகர் சூர்யா இவை அனைத்தையுமே செய்துவிட்டார், எனவே அவர் அவரது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மேலும் சில நல்ல படங்களை கொடுத்த பிறகு நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்.

 

நடிகராக இருந்தாலும் சரி, பேச்சாளராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் மக்கள் தலைவராகலாம், அரசியலுக்கும் வரலாம். ஆனால், அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர்கள் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும், அதன் பிறகு அரசியலுக்கு வர வேண்டும் என்பது என் கருத்து. அப்படி பார்த்தால் நடிகர் சூர்யா, தமிழக மக்களுக்காக பலவற்றை செய்து விட்டார். எனவே, அவர் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.” என்றார்.

 

நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று நடிகர் போஸ் வெங்கட் பேசியிருந்தாலும், அவரது பேச்சு முழுக்க முழுக்க நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.