2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆளுமையாக நடிகர் கார்த்தி தேர்வு!
‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘சர்தார்’ என கடந்த ஆண்டு தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி, உழவன் பவுண்டேஷன் மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகராக தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, சமூக பணிகளை மேற்கொண்டு வருவதால் நடிகர் கார்த்தியை 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆளுமையாக பிரபல தொலைக்காட்சி தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.
தமிழகத்தில் சிறந்த களப்பணி ஆற்றி வரும் விவசாயிகளை அடையாளம் கண்டு, வெளியுலகுக்கு அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே தன்னார்வத் தொண்டு நிறுவனமான உழவன் அமைப்பின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சமூகம் குறித்தும், தமிழர் பெருமை குறித்தும் வெவ்வேறு தளங்களில் தொடர்ந்து தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வருவதற்காகவும் நடிகர் கார்த்திக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவர், எப்படித் தொடர்ந்து சமூகப் பொறுப்புள்ள கதைகளைத் தேர்வு செய்து, வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்புத் திறனையும் நிரூபித்து வருகிறார் என்பது குறித்து இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டக் காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்திக்கு ஏற்கனவே ஸ்பெயின் நாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டிருந்ததால், அவரது நண்பரும், சர்தார் திரைப்படத்தின் தயாரிப்பாளருமான லக்ஷமண், கார்த்தியின் சார்பாக இவ்விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த கெளரவம் நடிகர் கார்த்திக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகக் கூறிய லக்ஷ்மண், உழவன் அமைப்பின் மூலம் கார்த்தி செய்து வரும் பல்வேறு நற்பணிகள் குறித்து நிகழ்ச்சியில் பேசினார்.