பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதி காலமானார்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி, திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 48.
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில், இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமான மனோஜ் பாரதி, ‘சமுத்திரம்’, ‘காதல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘வருசமெல்லாம் வசந்தம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதையடுத்து சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியவர், சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், ’மார்கழி திங்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.
இந்த நிலையில், நடிகர் மனோஜ் பாரதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 6 நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்து மனோஜ் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், சிறுநீரகம் செயலிழந்ததாலும், அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததாலும், அவருக்கு இன்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவு உறவினர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலையாள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மனோஜ் பாரதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.