Sep 25, 2017 07:08 PM

பிரபல நடிகர் பீலி சிவம் மரணம்! - நடிகர் சங்கம் இரங்கல்

பிரபல நடிகர் பீலி சிவம் மரணம்! - நடிகர் சங்கம் இரங்கல்

பிரபல நடிகர் பீலி சிவம் என்கிற பி.எல்.சிவனப்பன் இன்று (செப்.25) மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

 

உடல் நிலை பாதிப்பால், கடந்த ஒரு மாதமாக கோயம்பத்தூர் மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலி சிவம், சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார்.

 

பிரபல தொலைக்காட்சி நடிகராக இருந்த பீலி சிவம், கடந்த 1980 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சிவாஜி கணேசன் நடித்த ‘இமைகள்’, ‘முதல் வசந்தம்’, ‘பார்த்தால் பசு’, ‘மனசுக்கேத்த மகராசா’, ‘முகம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், 'இது ஒரு காதல் கதை', 'கனா காணும் காலங்கள்' , 'உறவுகள்' போன்ற பிரபல டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். விஜயகாந்தின் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், கடைசியாக 2010 ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘விருதகிரி’ படத்தில் நடித்தார்.

 

இவருக்கு ராஜேஸ்வரி  என்ற மனைவியும் உமாசங்கர்  என்ற மகனும் உள்ளனர்.  

 

இவரது உடல் நாளை செவ்வாய் கிழமை  காலை 11 மணி  அளவில் மேட்டுப்பாளையத்தில் தகனம் செய்யப்படுகிறது.  

 

பீலி சிவனத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், ”அன்னாரது மறைவு நடிகர் சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.