Mar 06, 2023 09:37 AM

படம் முடிந்த பிறகும் இந்த இரண்டு அம்சங்கள் நிச்சயம் பேசப்படும்! - ‘கொன்றால் பாவம்’ படம் பற்றி நடிகர் சந்தோஷ் பிரதாப்

படம் முடிந்த பிறகும் இந்த இரண்டு அம்சங்கள் நிச்சயம் பேசப்படும்! - ‘கொன்றால் பாவம்’ படம் பற்றி நடிகர் சந்தோஷ் பிரதாப்

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு தனது திறமையை நிரூபிக்கும் ஒரு படமாக ‘கொன்றால் பாவம்’ இருக்கும், என்று நடிகர் சந்தோஷ் பிரதாம் கூறி வருகிறார். சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ஒரு வீடு, ஒரு இரவில் நடக்கும் கதையம்சம் கொண்ட படமாகவும்.

 

கன்னட சினிமாவில் பிரபல இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கும் இப்படம் ஏற்கனவே கன்னடம் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்ட்டுள்ளது.

 

இப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு பதிப்புகளை காட்டிலும் தமிழ் பதிப்பை மிக பிரமாண்டமான முறையில் உருவாக்கியுள்ள தயாள் பத்மநாபன், தமிழை தாய் மொழியாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், ‘கொன்றால் பாவம்’ படத்தில் நடித்தது குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்ட நடிகர் சந்தோஷ் பிரதாப், “மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் நல்ல கதையம்சம் கொண்ட கதைகள் நிச்சயம் பார்வையாளர்களை உடனடியாக சென்றடையும். 'கொன்றால் பாவம்' கன்னடம் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் அசல் உட்பட அனைத்து மொழிகளிலும் மாயாஜாலம் செய்த ஒரு கதை. இந்தப் படம் அனைத்து நடிகர்களுக்கும் தேவையான இடத்தைக் கொடுத்து அவர்களது திறனை நிரூப்பிக்கும் வாய்ப்பையும்.கொடுத்துள்ளது. இயக்குநர் தயாள் பத்மநாபன் இந்தப் படத்தில் எனக்கு வலுவான ஒரு கதாபாத்திரம் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி. அனைவரும் சொல்வது போல, இந்தப் படத்தின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. படத்தின் இடைவேளையும் க்ளைமேக்ஸூம் நிச்சயம் பேசப்படும். படம் முடிந்த பிறகும் இந்த இரண்டு அம்சங்களும் நிச்சயம் பார்வையாளர்களை ஈர்க்கும்படி அமையும்.

 

Santhosh Pradap in Kondraal Paavam

 

என்னைப் போன்ற நடிகர்களுக்கு நல்ல ஒரு அணி அமைவது ஆசீர்வதிக்கப்பட்ட விஷயம் என்றே சொல்வேன். வரலக்ஷ்மி சரத்குமார் எந்த மொழியிலும் நடிகராக ஜொலிக்கக்கூடிய திறமையான கலைஞர். அவர் நன்கு பயிற்சி பெற்ற நடிகை. மேலும், எந்த ஒரு பாத்திரத்திலும் பொருந்தித் தன் திறமையை நிரூபிக்கக் கூடியவர். சார்லி சார், ஈஸ்வரி ராவ் மேடம் மற்றும் டீமில் உள்ள அனைவரும் சிறப்பான பணியை செய்துள்ளனர். செழியன் சாரின் விஷுவல் மேஜிக்குடன் கூடிய மிடாஸ்-டச் மற்றும் சாம் சிஎஸ்ஸின் அற்புதமான இசை படத்தை மேலும் அழகுபடுத்தியுள்ளது.

 

தயாள் சார் ஒரு ஜீனியஸ் மற்றும் திட்டமிட்டபடி பணி செய்யக் கூடியவர். கதையை தனித்துவமாகவும் அழகாகவும் கொண்டு வருவதில் அவர் வல்லவர். 'கொன்றால் பாவம்' திரைப்படம் தமிழ் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.” என்றார்.

 

Dayal Padmanaban and Santhosh Pradap

 

EINFACH ஸ்டுடியோஸ் சார்பில் பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார்.ஏ இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் மார்ச் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.