பொறுப்பில் உள்ளவர்களின் தவறுகளுக்கு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் - நடிகர் சூர்யா
நீட் தேர்வு எதிர்ப்பு தெரிவித்த மாணவி அனித தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களுகும், சமூக ஆர்வலர்களும், திரையுலகினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கல்வித்துறையின் இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது:
எங்கள் அகரம் பவுண்டேஷன் மூலம் 10 ஆண்டுகளாக கல்வி நலனுக்கு இயன்ற பங்களிப்பை கொடுத்து வருகிறோம். எங்கள் உதவி மூலம் தற்போது 1,943 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 49 பேர் மருத்துவ மாணவர்கள். இவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள். நல்ல உணவு கூட கிடைக்கப்பெறாதவர்கள்.
லட்சக்கணக்கான ரூபாய் செலுத்தி சிறந்த பள்ளிகளில் படித்து தனி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும், எந்த வசதியும் இல்லாத மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரே தேர்வு என்று நுழைப்பது பெரிய வன்முறை. கல்வி மூலம் ஏற்றத்தாழ்வு உள்ள நிலையில் ஒரே தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்வது நாகரீக சமுதாயம் செய்யும் வேலையல்ல.
அனைவருக்கும் பொதுவான தரமான இலவச கல்வியை வழங்க வேண்டிய அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட்டு தகுதிபடுத்துகிற நுழைவுத்தேர்வுகளை நடத்துவது என்ன நியாயம்? பொறுப்பில் உள்ளவர்களின் தவறுகளுக்கு அப்பாவி மாணவர்கள் பாதிப்படைகிறார்கள்.
ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி. பிறகு இருவருக்கும் ஒரே தேர்வு என்பதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. இந்த நாட்டில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும்.
வளர்ந்த நாடுகள் அனைத்திலும் பொது பள்ளி முறைதான் நடைமுறையில் இருக்கிறது. இதை உறுதி படுத்துவோருக்கே அடுத்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இந்தியா ஒரே தேசம். ஆனால் மொழி, இனம், பண்பாடு ஒன்று அல்ல. எனவே கல்வி என்பதை மாநில உரிமைக்கு உட்பட்ட அதிகாரமாக மாற்ற வேண்டும். மாணவர்களின் நலனை பாதிக்கும் எந்த செயல்களையும் எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தாய்மொழி வழி கல்விதான் சிறந்த கல்வி என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. வசதி வாய்ப்பற்ற பெரும்பான்மையான மாணவர்கள் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயில்கிறார்கள். எனவே, நுழைவுத்தேர்வுகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் என்பது அநீதியானது. எனவே, அந்தந்த மாநில மொழிகளிலும் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்.
அனிதாவின் மரணத்துக்கு அர்த்தம் சேர்க்கின்றவையில், ஒட்டு மொத்த கல்வி பிரச்சினைகளையும் தொகுத்து பார்க்க வேண்டும். இதை கவனிக்க தவறினால் சமூக நீதிக்கு போராடிய பெரியாரும், ஏழைகளுக்கு கல்விகள் திறந்த காமராஜரும் வாழ்ந்த மண்ணில், இனி வரும் தலைமுறையினருக்கு கல்வி பெயராலேயே சமூக நீதி மறுக்கப்படும். அவர்கள் எதிர்காலம் குருடாக்கப்படும்.
காமராஜரைப் போல ஏழை எளிய மக்களின் கல்வி நலனை அக்கறையோடு பார்ப்பவர்களே இனி ஆட்சியாளர்களாக வர வேண்டும். அதை நாம் உண்மையாக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வுகளை தரும். அனிதா போன்ற அப்பாவி குழந்தைகளை காப்பாற்றும். இது மாணவர்களின் உரிமை. அதை பெற்றுத்தர வேண்டியது நமது கடமை.
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.