விஜய்க்கு ஆதரவு தெரிவித்த காயத்ரி - பா.ஜ.கவுக்கள் ஏற்பட்ட புகைச்சல்!
’மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள டிஜிட்டல் மணி, ஜிஎஸ்டி சம்மந்தமான வசனங்கள் தமிழக அரசியல் ஏரியாவில் மட்டும் இன்றி டெல்லி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இரண்டு நாட்களில் அந்த வசனங்களை நீக்கவில்லை என்றால், படம் தியேட்டரில் ஓடாது, என்று பா.ஜ.க-வின் தமிழக தலைவர்கள் மிரட்டல் விடுத்தனர்.
இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிடுவதாக கூறிய தயாரிப்பு தரப்பு, காட்சிகளை நீக்கியும் விட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட சில பா.ஜ.க தலைவர்கள் விஜய்க்கு எதிராக பேட்டி கொடுத்து வருவதோடு, சமூக வலைதளங்களிலும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகையும் பா.ஜ.க பிரமுகருமான காயத்ரி, ‘மெர்சல்’ விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தமிழிசை சவுந்தரராஜனின் கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்திருப்பது தமிழக பா.ஜ.க வில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி பற்றியும் பணமில்லா பரிவர்தனை பற்றியும் தவறான புரிதலை ஏற்படுத்தும் கருத்துகள் பதிய வைத்திருப்பது ஏற்புடையது அல்ல என்று டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டர் பதிவிட்டதோடு, டிவிட்டரில் அரசியல் செய்ய முடியாது, களத்தில் இறங்கி அரசியல் செய்ய வேண்டும் என்று இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த நடிகை காயத்ரி ரகுராம், இது வெறும் படம் தான். நடிகர்கள் வசனம் எழுதுவது இல்லை. அனைவருக்கும் கருத்து உண்டு. நாம் நடிகரை குறை சொல்ல வேண்டாம். படம் சென்சாரில் சான்று வாங்கியுள்ளது. சினிமா, அரசியல் கட்சிகள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறது. பொழுதுபோக்கை பொழுதுபோக்காக பார்ப்போம். அதை நிஜ வாழ்க்கையில் அப்ளை செய்ய வேண்டாம், என்று ட்விட்டரில் தமிழிசைக்கு பதில் அளித்துள்ளார்.
பாஜக நிர்வாகியாக இருந்தும் கூட காயத்ரி தமிழிசைக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருப்பதால், தமிழக பா.ஜ.க-வில் பரபரப்பை கிளப்பியுள்ளது.