Sep 24, 2021 06:36 AM

மறுபடியும் பேய் படத்தில் நடிக்க இது தான் காரணம் - ’சிண்ட்ரெல்லா’ குறித்து ராய் லட்சுமி பேச்சு

மறுபடியும் பேய் படத்தில் நடிக்க இது தான் காரணம் - ’சிண்ட்ரெல்லா’ குறித்து ராய் லட்சுமி பேச்சு

ஒரு நடிகையோ அல்லது நடிகரோ குறிப்பிட்ட ஒரு ஜானரில் ஒன்று அல்லது இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து விட்டால் போதும், அதே ஜானரிலான கதைகளைக் கொண்ட படங்களில் வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கிவிடும். ஒரு கட்டத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கே சலிப்படையும் அளவுக்கு ஒரே ஜானரில் அவர்களை நடிக்க வைத்து வெறுப்பேற்றுவார்கள். அப்படி ஒரு நிலையில் தான் நடிகை ராய் லட்சுமியும் இருக்கிறார்.

 

‘காஞ்சனா’, ’அரண்மனை’, ‘சவுக்கார்பேட்டை’ என தொடர்ந்து பேய் படங்களில் நடித்தவருக்கு, வரும் வாய்ப்புகள் அனைத்தும் பேய் படங்களாக இருக்க, ஒரு கட்டத்தில் இனி பேய் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று முடிவுக்கு வந்தவர், பேய் கதையோடு வருபவர்களை பேய் போல் விரட்டியடித்து வந்த ராய் லட்சுமி, மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 

ஆம், ‘சிண்ட்ரெல்லா’ என்ற திகில் படத்தில் ராய் லட்சுமி நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் வினூ வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தை எஸ்.எஸ்.ஐ புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் இன்று (செப்.24) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

Ccinderella

 

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகை ராய் லட்சுமி, தான் மறுபடியும் பேய் படத்தில் நடித்தது குறித்து கூறுகையில், ”’சிண்ட்ரெல்லா’ ஒரு திகில் பேண்டஸி படம். இது வித்தியாசமான ஹாரர் படம். நிறைய திகில் படங்களை நீங்களும் நானும் பார்த்திருக்கிறோம். இது வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக இருக்கும். காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற  வெற்றிப் படங்களுக்குப் பிறகு, அதே மாதிரி படங்களாகவே எனக்கு வந்தன. ஆனால் அந்த வகை ஒரே மாதிரியான திகில் திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன். ஆனால் வினூ என்னை அணுகிய போது அதே வகை, என்றாலும் சிண்ட்ரெல்லா என்ற தலைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

 

சிண்ட்ரெல்லா என்ற அந்த ஒரு வார்த்தையில் நான் மனம் கவரப்பட்டேன். சிண்ட்ரெல்லா என்ற பெயரை தேவதைக்கதைகளில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரில் ஒரு திகில் படமா என்று வியந்தேன். ஆனால் அதையே ஒரு திகில் படமாக கூறினால் எப்படி இருக்கும் என்றபடி கதை சொல்ல ஆரம்பித்தார், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இதில் இரண்டு வேடம் என்று முதலில் அவர் சொல்லவே இல்லை. ஆனால் மூன்று வேடம் என்பது தெரியவே தெரியாது. போகப்போக ஒவ்வொரு பாத்திரமாக அவர் விளக்கினார்.

 

சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்த சம்பந்தப்பட்ட பாத்திரம் சவாலானது. பல நேரங்களில், அந்தக் கவுனை அணிந்து நடிப்பது மிகவும் சிரமமாகவும் அசெளகரியமாகவும் இருந்தது. டம் பார்க்கும் போது அந்த சிரமமெல்லாம் காணாமல் போய்விட்டது. இந்தப் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று இருந்தோம். அதன்படி இப்போது காலம் கை கூடி வந்துள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிண்ட்ரெல்லா தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்” என்றார்.

 

 

இயக்குநர் வினூ வெங்கடேஷ் பேசுகையில், “பல மாதங்களாக இந்த நிகழ்ச்சியில் பேசவேண்டும் என்று நிறைய தயாரித்து வைத்திருந்தேன். ஆனால் இப்போதைய சூழலில் எல்லாமே மறந்து விட்டனர.  என் மீது நம்பிக்கை வைத்து ராய் லக்ஷ்மி அவர்கள்  இந்த படத்திற்கு அருமையாக  நடித்துக் கொடுத்துப் பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார். அவரது ஆதரவும் நம்பிக்கையும் இல்லையென்றால், இப்படம் எந்த அளவிற்கு வந்து இருக்குமா தெரியாது.அடுத்து நான் நன்றி சொல்ல விரும்புவது ரோபோ சங்கர். அவர் பொதுவாக இந்த மாதிரியான வாய்ப்புகளை ஏற்கமாட்டார். 10-க்கும் குறைவான நாட்கள் கால்ஷீட், ஆனால் அவர் இந்த படத்தில் எனக்காக நடித்து   உதவினார். ஆதரவளித்ததற்காக நான் எல்லா நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் நன்றி கூறுகிறேன். சாக்ஷி வில்லி வேடத்தில் நடித்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். சிண்ட்ரெல்லா ஒரு வழக்கமான திகில் படமாக இருக்காது.இதுவரை பார்த்த திகில் படங்களில் திரும்பத் திரும்ப காட்டப்பட்டுள்ள சலிப்பூட்டும் விஷயங்கள் இதில் நிச்சயமாக இருக்காது.பேய்களை வைத்து நாங்கள் காமெடி செய்யவில்லை. பேய்களை  மரியாதையாகத்தான் காட்டி இருக்கிறோம்.திரையரங்குகளில் ரசிகர்கள் நிச்சயமாக இதை ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.