மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய தடை!
டிஜிட்டல் சேவை வழங்குபவர்களுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு தடை விதித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருவது போல, சினிமாவும் முழுமையாக டிஜிட்டலால் மூழ்கிவிட்டது. திரைப்படத்தை டிஜிட்டல் கேமரா மூலம் படமாக்குவதோடு, திரையரங்குகளில் பயன்படுத்தப்படும் புரொஜக்டர்களுக்கு பதிலாக, ‘கியூப்’ உள்ளிட்ட பல டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட டிஜிட்டல் சேவைகளை திரையரங்குகளுக்கு வழங்கும் நிறுவனங்கள் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியாகும் போது, படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களிடம் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்து வந்தார்கள். இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், கட்டணத்தை குறைக்கும்படி பல முறை கோரிக்கை வைத்தும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்துவதற்காக விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச்-1 ஆம் தேதி முதல், தங்களின் நியாமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து இருக்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியன்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழக்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தமிழ்த் திரையுலகமும் மேற்கண்ட மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த Digital Service Providers – க்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் நிறைவேற்றும் வரை, புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.