பாலிவுட் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதையின் நாயகியாக நடித்து பல வெற்றிகளை கொடுத்து வருவதோடு, தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாலிவுட் படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமாகிறார்.
இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியாநிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ' மாணிக்' எனும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தின் மூலம் இந்தியில் வெளியான ‘லுடோ’, ‘ஜக்கா ஜாசூஸ்’ மற்றும் ‘சத்ரசல்’ ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவர்த்தி இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் நடிகை சம்யுக்தா சண்முகநாதன், நடிகர் விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் தற்பொழுது சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான படைப்புகளுக்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை ஈர்க்கும் இந்த வகையான சினிமாவிற்கு இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருப்பதை நாங்கள் காண்கிறோம்.
'மாணிக்: படத்தைப் பற்றி எண்டேமால் ஷைன் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ரிஷி நேகி பேசுகையில், ”திறமையான இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தியின் இயக்கத்திலும், நட்சத்திர நடிகர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பிலும் 'மாணிக்' படத்தின் உயிரோட்டமான கதைக்களத்தை பார்வையாளர்களுக்கு சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
‘மாணிக்’ படத்தை பற்றி நட்மெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வருண் திரிபுராநேனி கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இரண்டாவது படத்திற்காக, எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தி இந்த கதையை சொன்னபோது, நாங்கள் இதன் தயாரிப்பில் உற்சாகமாக களமிறங்கினோம். திறமையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படக்குழுவில் இணைந்திருப்பதால், இந்தப் படம் தரமான படைப்பாக உருவாகும். இதனை நாங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
இம்மாதம் நைனிடாவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்பட்த்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.