Sep 12, 2024 06:28 AM

ஒரு நடிகை கதாநாயகியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை! - ‘பராரி’ நாயகியின் பளீர் கருத்து

ஒரு நடிகை கதாநாயகியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை! - ‘பராரி’ நாயகியின் பளீர் கருத்து

திரை இருப்பு மற்றும் நடிப்பு போன்றவற்றால் முதல் படமாக இருந்தாலும், அதில் தனது கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் ஆழ பதிய செய்துவிடும் நடிகைகள் அறிமுகம் என்பது மிக குறைவு என்றாலும், அத்தகைய நடிகைகளில் கோலிவுட்டில் அவ்வபோது அறிமுகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடிக்க கூடிய ஒரு நடிகை என்ற எதிர்பார்ப்போடு அறிமுகமாக இருப்பவர் தான் சங்கீதா கல்யாண் குமார்.

 

சந்தானம் நடிப்பில் வெளியான ‘80ஸ் பில்டப்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சங்கீதா கல்யாண் குமார், ‘பராரி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநர் ராஜு முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எழில் பெரியவாடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராரி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இதில் நடிகை சங்கீதா கல்யாண் குமாரின் திரை இருப்பு மற்றும் நடிப்பு கவனம் ஈர்த்திருப்பதோடு, அவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

 

சென்னையை சேர்ந்த சங்கீதா கல்யாண் குமார், பி.எஸ்.சி விஷுவம் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றவர், திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் பற்றிய விசாலமான பார்வையை பெற்றிருக்கிறார். அதன் மூலம், ஒரு நடிகை என்றால் கதாநாயகியாக மட்டுமே திரைப்படங்களில் நடிக்க வேண்டிய அவசியமில்லை, கதைக்கு தேவைப்படும் வலுவான கதாபாத்திரங்களிலும் நடிக்கலாம், என்ற சிந்தனைக் கொண்டவராக திகழ்கிறார். 

 

மேலும், இயக்குநர்கள் வெற்றிமாறன், செல்வராகவன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் போன்றவர்ல: பல நடிகைகளுக்கு இதுபோன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களை கொடுத்துள்ளனர். எனவே, அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தனது கனவு, என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியவர், தனது கனவு கதாபாத்திரங்கள் பற்றியும் பகிர்ந்துக் கொண்டார்.

 

”’கார்கி’, ’மகாநடி’ (நடிகையர் திலகம்), ’அருந்ததி’, ’சீதா ராமம்’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தத் திரைப்படங்கள் ஒருபோதும் பழையதாகாது. வருடங்கள் செல்லச் செல்ல இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். இந்தப் படங்களில் நடிகைகள் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஷெட்டி மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் இந்தப் படங்களில் மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கின்றனர். எந்த நடிகைக்கும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். எனக்கும் இருக்கிறது” என்றார்.

 

நம்பிக்கையுடன் தனது திரையுலக பயணத்தை தொடங்கியிருக்கும் நடிகை சங்கீதா கல்யாண் குமார், ‘பராரி’ படத்திற்குப் பிறகு நிச்சயம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பார், என்பது அவரது தெளிவான பேச்சு மற்றும் திரையுலகின் மீதான பார்வையில் தெரிகிறது.