Oct 27, 2022 05:07 PM

அஞ்சலி நடிப்பில் உருவான ‘ஜான்சி’ இணைய தொடர் வெளியானது!

அஞ்சலி நடிப்பில் உருவான ‘ஜான்சி’ இணைய தொடர் வெளியானது!

நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில், அஞ்சலி கதையின் நாயகியாக நடித்திருக்கும் இணைய தொடர் ‘ஜான்சி’. இயக்குநர் திரு இயக்கியிருக்கும் இத்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகியுள்ளது.  கணேஷ் கார்த்திக் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இத்தொடர் வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், கடந்த காலத்தின் பின்னிருக்கும் ரகசியங்களை தேடுவதை திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கிறது.

 

10 பாகங்களாக உருவாகியுள்ள இத்தொடரில் அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்க, சாந்தினி செளத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ராமேஸ்வரி தல்லூரி, சம்யுக்தா ஹார்நாட், சரண்யா ராமச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், முமைத் கான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

டிரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திற்காக தயாரித்திருக்கும் இத்தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக நேற்றி ‘ஜான்சி’ தொடரின் குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தொடர் குறித்து பேசிய தயாரிப்பாளர் நடிகர் கிருஷ்ணா, “இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக "பெல் பாட்டம்" வருகிறது. எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. ஹாட்ஸ்டாரில் இந்த கதையை சொன்னவுடன் ஒப்புக்கொண்டார்கள். ஜீகேயிடம் இதை பெரிய டைரக்டர் பண்ணினால் நல்லாருக்கும் என்றவுடன்  ஜீகே ஒப்புக்கொண்டார். திருவிடம், ஜீகே ஒரு எபிஸோடாவது டைரக்ட் பண்ணணும் என்றேன். அவரும் பெருந்தன்மையாக ஓகே என்றார். அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். நான் இதில் நடிக்கவில்லை எனக்கு எதாவது கொடுங்க எனக் கேட்டேன். ஆனால் கடைசி வரை தரவில்லை. இந்த தொடர் மிக நன்றாக வந்துள்ளது. முக்கியமாக இத்தொடருக்கு பெரும் ஒத்துழைப்பு தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்க்கு நன்றி. இது எங்கள் மனதுக்கு பிடித்த படைப்பு, உங்களுக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

தொடரின் இயக்குநர் திரு பேசுகையில், “கிருஷ்ணா என்னிடம் போன் செய்து இந்தக்கதை பற்றி சொன்னார். முதலில் வெப் சீரிஸாக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது. மிகப்பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டிய கதை. எல்லோரும் சேர்ந்து அதை குறிப்பிட்ட பட்ஜெட்டில் 10 எபிஸோடில் எடுத்துள்ளோம். இதில் மிகப்பெரிய ப்ளஸ் திரைக்கதை. மிக அட்டகாசமாக எழுதியிருந்தார்கள், பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். கிருஷ்ணாவுடன் நடிகராக அவரை இயக்கி வேலை பார்ப்பேன் என நினைத்தேன் ஆனால் அவர் தயாரிப்பாளராக இருக்கும் படைப்பில் வேலை பார்த்திருக்கிறேன். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார். ஒளிப்பதிவாளர் மிக அட்டகாசமாக செய்துள்ளார். ஜீகே மிக சிறந்த இயக்குநராக வருவார். அஞ்சலி இதில் அதிரடி ஆக்சன் பண்ணியிருக்கார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்.” என்றார்.

 

Jhansi

 

எழுத்தாளர் கணேஷ் கார்த்திக் பேசுகையில், “இந்தகதையை எழுதிவிட்டு பலரிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணா சாரை சந்தித்தேன். அவர் கேட்டவுடன் இதை நாம் பண்ணலாம் என்றார். இயலாமை கொண்ட ஒரு பெண்ணின் கோபம் தான் இந்தக்கதை. மிகவும் அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம். திரு சாரிடம் இத்தொடரில் வேலை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். அஞ்சலி கேமரா முன் வந்துவிட்டால் அப்படியே கதாப்பாத்திரமாக மாறிவிடுவார். மிக திறமைசாலி. என்னுடைய திரை வாழ்வின் ஆரம்ப பயணம்  இந்த "ஜான்ஸி". உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் சத்ய சிவா பேசுகையில், “கிருஷ்ணா சாரை நல்ல நடிகராக தெரியும். அவர் கண்டிப்பாக தயாரிப்பாளர் ஆவார் என கழுகு டைம்ல இருந்தே தெரியும். கழுகு கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்காத போது, அதை பலரிடம் எடுத்து சென்றவர் அவர் தான். அவர் கண்டிப்பாக ஒரு நல்ல தயாரிப்பாளராக ஜெயிப்பார். எங்கள் கூட்டணியில் அடுத்து "பெல்பாட்டம்" படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

 

அர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்தொடருக்கு ஸ்ரீசரண் பக்கலா இசையமைத்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, யானிக் பென் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ராஜ்கமல் கலையை நிர்மாணித்துள்ளார்.