Oct 15, 2024 09:34 AM

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு!

சூர்யாவின் நடிப்பில் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், அவரது 44 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபடத்தில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

 

இந்த நிலையில், சூர்யாவின் 45 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். 

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தயாரிப்பு நிறுவனத்தின் புகழ்பெற்ற பட வரிசையில் மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகும் படமாக இருக்கும். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற நகைச்சுவை  மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய படங்களை இயக்கிய,  நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார்.

 

ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த படத்தின் பரபரப்பான திரைக்கதையை உருவாக்கி வரும், இயக்குநர்  ஆர்ஜே பாலாஜி தற்போது சூர்யா 45 படத்தின் முன் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பக்கா என்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான  இடங்களை  பல இடங்களுக்குச் சென்று தேர்வு செய்து வருகிறார்.

 

ஆர்.ஜே.பாலாஜியின் திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட ஆஸ்கர் விருது நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.  ஏ.ஆர்.ரஹ்மானும் சூர்யாவும் இதற்கு முன்பு ’சில்லுனு ஒரு காதல்’, ’ஆயுத எழுத்து’ மற்றும் '24' போன்ற கிளாசிக் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர்-இசையமைப்பாளர் ஜோடியின், இந்த புதிய படத்தின் பாடல்களும் இசை ஆர்வலர்களின்  மத்தியில் ஆட்சி செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

 

ஆர்ஜே பாலாஜி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இந்த மதிப்புமிக்க திரைப்படத்திற்காக, பல திறமையான பிரபல கலைஞர்களை இப்படத்தில் இறுதி செய்து வருகின்றனர். நவம்பர் 2024-ல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.  2025-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் "சூர்யா 45" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். இப்படத்தில் நடிக்கவுள்ள  நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு  விரைவில் வெளியாகும்.