Oct 02, 2024 07:59 AM

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி

ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’. இதில் கல்லூரி வினோத் கதையின் நாயகனக நடிக்க, பிரியா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் டார்லிங் மதன், பி.எல்.தேனப்பன், வேலு பிரபாகரன், பிரியங்கா ரோபோ சங்கர், விஜய் சத்யா, வீரா, சுப்பிரமணி, ஜீவன் பிரபாகர், செல்வா, வினோத் பிரான்சிஸ், மூர்த்தி, சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

தீபக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஆலன் விஜய் இசையமைத்திருக்கிறார். கே.கே.விக்னேஷ் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் கலை இயக்குநராக வி.கே.நட்ராஜ் பணியாற்றியுள்ளார். 

 

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக பத்திரிகையாளரும், யுடியுப் பிரபலமுமான பயில்வான் ரங்கநாதன், ”பல நல்ல விசயங்களோடு உருவாகியிருக்கும் ‘அப்பு’ திரைப்படம் மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்” படம் என்று பாராட்டினார்.

 

தொடர்ந்து படம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், “’அப்பு’ திரைப்படத்தை பார்த்தேன், சிறப்பான முயற்சி. படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த கல்லூரி வினோத் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். துணை நடிகராக வந்த நடிகர் ரஜினிகாந்த், எப்படி வில்லன் பிறகு ஹீரோ என்று வளர்ச்சியடைந்தாரோ அதுபோல் வினோத்தும் ஹீரோவாக வெற்றி பெறுவார், அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. நல்ல வாய்ப்புகள் அமைந்தால் அவர் தன்னை நிரூபிப்பார் என்பது இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. கதாநாயகி பிரியா பார்ப்பதற்கு சினேகா போல் இருக்கிறார், அவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. அப்பு கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனின் நடிப்பும் பாராட்டத்தக்கது. அவரது சோகத்தை பார்க்கும் போது படம் பார்ப்பவர்கள் நிச்சயம் கண்கலங்குவார்கள்.

 

எழுதி இயக்கியிருக்கும் வசீகரன் பாலாஜி, தனது முதல் படத்தை பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்ற முயற்சியோடு இயக்கியிருக்கிறார். போலீஸ் என்கவுண்டர்கள் எப்படி உருவாகிறது என்பதை எதார்த்தமாக பதிவு செய்திருப்பவர், பிறக்கும் போது அனைவரும் நல்லவர்களாக தான் பிறக்கிறார்கள், ஆனால் சூழல் அவர்களை எப்படி குற்றவாளிகளாக்குகிறது, என்பதையும் படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். மேலும், படிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பை மட்டும் கைவிட கூடாது, என்பதையும் அப்பு கதாபாத்திரம் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்த படத்தை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் வசீகரன் பாலாஜி படம் குறித்து பேசுகையில், “சமூகத்தில் நடக்கும் உண்மையான சம்பவங்களை மையமாக வைத்து தான் ‘அப்பு’ படத்தின் கதை எழுதினேன். குறிப்பாக, சாலைகளிலும், சிக்னல்களிலும் சிறுவர்கள் பிச்சை எடுப்பது, பென்சில், புத்தகம் விற்பது என்று இருக்கிறார்கள். இவர்கள் யார்?, எப்படி இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள்? என்பதை யோசிப்பேன், அது தான் என்னை இந்த கதையை எழுத தூண்டியது. தமிழ்நாட்டில் கல்வி என்பது சுலபமாக கிடைக்க கூடியது. அதிலும் தமிழக அரசு மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் தடை படக்கூடாது என்பதற்காக காலை உணவு, மத்திய உணவு திட்டங்கள் உள்ளிட்ட பல வசதிகளை செய்துக்கொடுக்கிறது. இருந்தாலும், தற்போதைய சூழலில் சிக்னல்களில் சில சிறுவர்கள் பிச்சை எடுப்பது, புத்தகம் உள்ளிட்ட பொருட்களை விற்பதையும் நாம் பார்க்கிறோம், அது ஏன்? என்ற கேள்வியின் கற்பனை தான் ‘அப்பு’.

 

முதலில் ‘அப்பு’ என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி தான் கதை எழுதினேன், பிறகு வினோத் கதாபாத்திரம், தர்மா போன்ற கதாபாத்திரங்களை இணைத்து கமர்ஷியல் திரில்லராக திரைக்கதையை நகர்த்தினேன். பத்திரிகையாளர்கள் படம் பார்த்து பாராட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் பாராட்டு எனது முதல் வெற்றியாக பார்க்கிறேன், நிச்சயம் மக்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு தருவார்கள், என்று நம்புகிறேன்.” என்றார்.

 

நடிகர் கல்லூரி வினோத் பேசுகையில், ”என்னிடம் இயக்குநர் கதை சொல்லும் போதே அப்பு என்ற சிறுவன் மீது தான் கதை பயணிப்பது தெரியும். ஆனால், அதை தாண்டி முழுப்படமாக பார்க்கும் போது ஒரு நல்ல படமாக இருந்தது. அதனால் அதை தவறவிட கூடாது என்று ஒப்புக்கொண்டேன். எனக்கு கொடுத்த வேலையை நான் சரியாக செய்திருக்கிறேன், என்று நம்புகிறேன். கதாநாயகன் என்று இல்லை, எந்த வேடமாக இருந்தாலும் நன்றாக நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம், தொடர்ந்து அதை செய்வேன்.” என்றார்.

 

நடிகை பிரியா பேசுகையில், “எனக்கு இயக்குநர் கதை சொல்லும் போது முழு கதையும் சொல்லவில்லை, என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று தான் சொன்னார். எனக்கு பிடித்ததால் நடித்தேன். என் கதாபாத்திரம் குறைவான காட்சிகளில் வந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படி இருப்பது மகிழ்ச்சி.” என்றார்.

 

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘அப்பு’ திரைப்படத்தை பிரைடே பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.