பத்திரிகையாளர் சுட்டு கொலை - ஏ.ஆர்.ரஹ்மான் கண்டனம்!
பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் நிறுவனம் இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஒன் ஹார்ட்’. இந்தியாவின் முதல் இசை கான்சர்ட் திரைப்படமான இப்படம், ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நடத்திய இசை நிகழ்ச்சிகளின் தொகுப்பாகும். 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தின் நிகழ்வுகளில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலப் பாடல்களை ரஹ்மான் பாடியுள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட ரஹ்மானிடம் பத்திரிகையாளர் கெளரி லங்கேர் கொலை குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, “நான் அதற்காக ரொம்ப வருந்துகிறேன். இதுபோன்ற விஷயங்கள் இந்தியாவில் நடக்க வேண்டாம் என நினைக்கிறேன். இப்படிப்பட்ட சம்பவங்கள் இந்தியாவில் நடந்தால் அது என் இந்தியா அல்ல. என் இந்தியா முன்னேறுகிற, அன்பு கொண்ட நாடாக இருக்கவே விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
கன்னட பத்திரிகையின் ஆசிரியரும், சமூக ஆர்வலருமான கெளரி லங்கேஷ், கடந்த 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பெங்களூர் ராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.