’அரண்மனை 4’ பொங்கலுக்கு வெளியாகிறது! - இயக்குநர் சுந்தர்.சி அறிவிப்பு

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘அரண்மனை’ படத்தின் நான்காவது பாகம் பற்றி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடேட் சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கி நாயகனாக நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி, ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருப்பதோடு, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படியான படங்களை இயக்கி வருபவர். அந்த வகையில் அவர் உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.
சுந்தர்.சி எழுதி இயக்கும் இப்படத்திற்கு வேங்கட் ராகவன் வசனம் எழுதுகிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, பொன்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ராஜசேகர்.கே சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.
முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. 2024 பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.