இந்திய நிலப்பரப்பின் கடைசி சாலையில் நடைபெறும் திகில் படம் ‘அரிச்சல் முனை’ பூஜையுடன் துவங்கியது
தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சியோடு உருவாகும் படங்களுக்கு என்றுமே வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ளது ‘அரிச்சல் முனை’. இந்திய நிலப்பரப்பின் கடைசி சாலையான தனுஷ்கோடி அரிச்சல் சாலையில் நடைபெறும் திகில் சம்பவத்தை வித்தியாசமான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சிகளோடும் உருவாக இருக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது.
கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘கடத்தல்காரன்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.குமார் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக உருவாகும் ‘அரிச்சல் முனை’ படத்தை கலாஞ்சலி சினிமாஸ் நிறுவனம் சார்பில் அனில் கலாஞ்சலி தயாரிக்கிறார்.
இப்படத்தில் நாயகன், நாயகியாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் யார்? என்ற தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங், வைகாசி ரவி, ருக்மணி பாபு, நடிகையும் டப்பிங் கலைஞருமான கிருஷ்ணா தேவி, சுதா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
இப்படம் குறித்து கூறிய இயக்குநர் எஸ்.குமார், “சினிமா ஹீரோவான படத்தின் நாயகன், பேய் படங்களில் ஆவி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்போது ஆவி ஓட்டுபவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைப்பதால், அதன் மூலம் ஆவியாக இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விடலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றுகிறது. அதன்படி, தனது அப்பாவை கொலை செய்த தமிழக அரசியல்வாதி ஒருவரை ஆவியின் மூலம் பழிவாங்க திட்டமிடுகிறார். அவரை ஆவி ரூபத்தில் பழிவாங்குவதற்காக கன்னியாகுமரியில் இருந்து ராமேஷ்வரத்தில் ஹீரோ காரில் பயணம் மேற்கொள்கிறார். இதற்கிடையே, திருநெல்வேலி அருகே ஹீரோவிடம் ஹீரோயின் லிப்ட் கேட்கிறார். அதன்படி ஹீரோ லிப்ட் கொடுக்க, அவர் ஹீரோவின் கல்லூரியில் படித்தவர் என்பதும், அவர் ஒருதலையாக ஹீரோவை காதலித்தார் என்பதோடு, ஹீரோ யாரை பழிவாங்க சென்றுக் கொண்டிருக்கிறாரோ அதே அரசியல்வாதியை பழிவாங்கும் எண்ணம் ஹீரோயினுக்கும் இருக்கிறது.
அந்த அரசியல்வாதி ராமேஷ்வரத்தில் சிறப்பு பூஜை செய்வதற்காக வருகிறார். அப்போது அரிச்சல் முனையில் வில்லனை எதிர்கொள்ளும் நாயகனும், நாயகியும் அவரை எப்படி பழிவாங்குகிறார்கள், என்பதை யாரும் எதிர்ப்பார்க்காத திகில் சம்பவங்களோடு சொல்லியிருக்கிறோம்.” என்றார்.
கதை, திரைக்கதை, இயக்கம் எஸ்.குமார். ஜினோ பாபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிபின் அசோக் இசையமைக்கிறார். தீபு பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். நாஞ்சில் பாண்டியராஜன் மேக்கப் பணியை கவனிக்க, மணிகண்டன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஜானி நடனம் அமைக்க, இணை இயக்குநராக தேவா பணியாற்றுகிறார். ஆர்.ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பை கவனிக்க, ராஜேஷ் கே.மதி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். சுஹைல் பல்லக்கல் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, மணிபாரதி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பிஆர்ஓ பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார். அனில் கலாஞ்சலி தயாரிக்கிறார்.
கன்னியாகுமரி, ராமேஷ்வரம், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ள ‘அரிச்சல் முனை’ஹட் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.