‘விடுதலை - பாகம் 2’-ன் கர்நாடக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஏவி மீடியா!
தமிழ் சினிமாவில் வரும் உணர்வுப்பூர்வமான கதைக்களங்கள் பிறமொழி பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியான ஒரு படமாக வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வெளியான ‘விடுதலை - பாகம் 1’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், இரண்டாம் பாகத்தின் மீது தமிழகத்தை கடந்து மற்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ‘விடுதலை - பாகம் 2’-ன் முதல் பார்வை புகைப்படங்கள் வெளியானது. விஜய் சேதுபதியின் இளம்வயது தோற்றம் மற்றும் மஞ்சு வாரியர் உடனான அவரது புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.
இந்த நிலையில், முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஏவி மீடியா, ‘விடுதலை - பாகம் 2’ படத்தின் கர்நாடக திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
இது குறித்து ஏவி மீடியாவின் வெங்கடேசன் கூறுகையில், “திரைப்படங்களை வாங்கி, வெளியிடுவதை நாங்கள் துல்லியமாகவும் கச்சிதமாகவும் வெற்றிகரமாகவும் செய்து வருகிறோம். ’விடுதலை - பாகம் 2’ போன்ற ஒரு திரைப்படம் எங்களை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது. இந்தப் படத்தைப் பற்றி நாம் கேள்விப்படுவதை விட பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பார்வையாளர்களுக்கு உள்ளது. ஒரு விநியோக நிறுவனமாக, இந்தப் படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.” என்றார்.
’விடுதலை 1’ படத்திற்குப் பிறகு, நடிகர்கள் - விஜய்சேதுபதி மற்றும் சூரி இருவரும் 'மகாராஜா' மற்றும் 'கருடன்' என அவர்களின் சமீபத்திய படங்களின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த இரண்டு படங்களும் கர்நாடகாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ரஜினியின் 'ஜெயிலர்', 'விடுதலை '1, 'சர்தார்', 'மகாராஜா', 'கருடன்', 'கல்கி' மற்றும் தனுஷின் 'ராயன்' ஆகிய படங்களை வெளியிட்ட ஏவி மீடியா 'விடுதலை 2' படமும் தங்களுக்கு லாபகரமான படமாக இருக்கும் என்று நம்புகிறது.