May 07, 2023 05:49 PM

’ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

’ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ் சினிமாவின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் கடந்த 77 வருடங்களில் 178 திரைப்படங்களை தயாரித்துள்ளது. தமிழ் திரையுலகின் அடையாளங்களில் முக்கியமானதாக திகழும் ஏவிஎம் ஸ்டுடியோஸ், இந்தியாவின் மிக பழமையான நிறுவனமாக இருந்தாலும், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் காலத்துக்கு ஏற்ப தன்னை கட்டமைத்து தற்போதும் அதே பெருமையோடு, புகழோடும் வலம் வருகிறது.

 

இந்த நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் ஒன்றை திறந்துள்ளது. சினிமா வரலாறு மற்றும் பெருமையை கொண்டாடும் விதமாக, அதே சமயம் கவனமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள், உபகரணங்கள் மற்றும் அரிதான இயந்திர சாதனங்கள் என ஏவிஎம் நிறுவனத்தின் பெருமையை வாய்ந்த வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா இன்று சென்னை, சாலிகிராமத்தில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அங்காட்சியகத்தை திறந்து வைத்தார். 

 

நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், பாடலாசிரியர் வைரமுத்து, டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர் பொன்முடி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட திரையுல மற்றும் அரசியல் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

 

AVM Heritage Museum

 

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் வாரத்தில் புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். செவ்வாய்க்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும்.

 

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு நுழை கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.200-ம், சிறியவர்களுக்கு ரூ.150-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.