Nov 08, 2022 05:32 AM

பெண்களின் சர்வதேச கீதமான “ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்” பாடல்!

பெண்களின் சர்வதேச கீதமான “ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்” பாடல்!

இலங்கையை சேர்ந்த பிரபல தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான பொத்துவில் அஸ்மின், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதையான 'வானே இடிந்ததம்மா' என்ற சோகப்பாடல் உலகில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

இலங்கை அரசின் சிறந்த கவிஞருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள கவிஞர் அஸ்மின், அந்நாட்டில் உள்ள தமிழர்களால் 'இளைய வைரமுத்து' என்று பிரியமாக அழைக்கப்படுகிறார்.

 

இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனியின் நடிப்பில் வெளியான 'நான்' திரைப்படத்துக்காக புதுமுக கவிஞரை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் சர்வதேச அளவில் 'புதிய பாடலாசிரியருக்கான தேர்வு' போட்டி ஒன்று நடத்தப்பட்டது. சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் கவிஞர் அஸ்மின் இயற்றிய ”தப்பெல்லாம் தப்பேயில்லை...” என்ற பாடல் அந்த திரைப்படத்தில் இடம்பெற்றது.

 

அதன் பின்னர் பல தமிழ் திரைப்படங்களுக்கான பாடல்களை எழுதியுள்ள கவிஞர் அஸ்மின், தனது 'யூடியூப்' சானலின் வாயிலாக ஏராளமன தனியிசைப் பாடல்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

 

மேலும், ரஜினிகாந்தி ‘அண்ணாத்த’ படத்திற்கு அஸ்மின் எழுதிய புரோமோ பாடல் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, சோசியல் மீடியாவில் வைரலாகி டிரெண்டானது.

 

Asmin

 

இந்த நிலையில், ”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதூம்...” என்ற தனியிசை பாடலை அஸ்மின் எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள இப்பாடல், கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக உருவெடுத்து வைரலாகி வருகிறது.

 

இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சனுக விக்ரமசிங்கே இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல இலங்கை பாடகி விண்டி குணதிலக்க பாடியுள்ளார்.

 

மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மனிகே மகே ஹித்தே பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.