’காஷ்மீர் பைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ படங்கள் வரிசையில் ‘பாய்’ படம் ஏற்படுத்திய சர்ச்சை!
‘காஷ்மீர் பைல்ஸ்’ மற்றும் ‘தி கேரளா ஸ்டோரி’ ஆகிய திரைப்படங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பேசி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் பா.ஜ.க அரசு இந்த படங்களுக்கு பெரும் ஆதரவளித்தாலும், சமூக ஆர்வலர்களும், பல அரசியல் தலைவர்களும் இந்த இரண்டு படங்களுக்கும், அதில் பேசப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ‘காஷ்மீர் பைல்ஸ்’ மற்றும் ‘தி கேரளா ஸ்டோரி’ வரிசையில் தமிழ் சினிமாவிலும் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது, என்று சொல்லும் அளவுக்கு சமீபத்தில் வெளியான ‘பாய்’ திரைப்படத்தின் டிரைலரில் உள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் அமைந்திருக்கிறது.
“மூன்று உடங்களில் வெடிகுண்டு வெடிப்பது உறுதி” என்ற வசனத்தின் பின்னணியில் கோவில் மற்றும் கிறிஸ்தவ தேவலாயங்கள் காட்சியோடு டிரைலர் தொடங்குகிறது. ஆரம்பத்திலே பெரும் அதிர்வை ஏற்படுத்தும் டிரைலரில்,
”எங்க பாய் சொல்வார் மதம் ஒரு அரசியல் கருவி” என்ற வசனம் வர, அப்போது மூன்று மதங்கள் எழுதப்பட்ட பேப்பரை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
மேலும், “நான் மதம் மாறனுமா?” என்று ஒருவர் கேட்க, இஸ்லாமிய பெண் தொழும்போது மூன்று பேர் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் காட்சியோடு, பிடித்த பெண்ணை கல்யாணம் செய்ய மதம் மாற்றம், போன்ற வசங்களும் இடம்பெற்றிருக்கிறது.
இப்படி ஒவ்வொரு காட்சியும், வசனமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவூட்டும் வகையில், மாருதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றையும் வைத்து அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்கள்.
இப்படி டிரைலரே இஸ்லாமியர்களை தாக்கும் விதமாக அமைந்திருப்பதால், உலகையே புரட்டி போட்ட 1998 ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு மற்றும் சமீபத்தில் நடைபெற்ற கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை மையமாக கொண்டு இந்த ‘பாய்’ படம் உருவாகியிருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆக, ‘காஷ்மீர் பைல்ஸ்’ மற்றும் ‘தி கேரளா ஸ்டோரி’ வரிசையில் ‘பாய்’ திரைப்படமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் டிரைலர் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இப்படி ஒரு சர்ச்சையை எழுப்பியிருக்கும் ‘பாய்’ திரைப்படம் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.