Aug 29, 2024 05:51 PM

இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே இடம்பெறும் வித்தியாசமான திரில்லர் படம் ‘பிளாக்’!

இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே இடம்பெறும் வித்தியாசமான திரில்லர் படம் ‘பிளாக்’!

வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்வதோடு, அப்படங்களை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேச வைத்து சூப்பர் ஹிட் படங்களாக்கும் வித்தையை தொடர்ந்து செய்து வருகிறது ‘பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்’. (Potential Studios) ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ‘இறுகப்பற்று’ என இந்நிறுவனம் தயாரித்த படங்கள் மக்களிடம் இன்றளவும் பேசப்பட்டு வருகின்ற நிலையில், மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தை தயாரித்துள்ளது.

 

ஒரு இரவு, இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பயணிக்கும் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘பிளாக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படம் பற்றி இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படுவதோடு, அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாகவும், இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். இப்படி நொடிக்கு நொடி திரில்லராக பயணிக்கும் கதை தான் ‘பிளாக்’.

 

நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதியில் புரிந்துக் கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிக் கொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கும் பொருந்தும்.” என்றார்.

 

கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு, சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்ய, மெட்ரோ மகேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். மதன் கார்கி மற்றும் சந்துரு பாடல்கள் எழுத, ஷெரீப் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வெளியீட்டு பணியில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டுள்ளது.