’மா.பொ.சி’ தலைப்பு சர்ச்சை விளக்கம் அளித்த வெங்கட் போஸ்!
‘கன்னி மாடம்’ படத்தை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இரண்டாவது படத்திற்கு ‘மா.பொ.சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விமல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அறந்தாங்கியில் சமீபத்தில் தொடங்கியது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவா வி.மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார்கள்.
பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ‘மா.பொ.சி’ படக்குழுவினர் படம் குறித்து பேசினார்கள். அப்போது தலைப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட், “பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் பூஜை சென்னையில் தான் நடைபெறும். ஆனால், அறந்தாங்கி என்னுடைய பிறந்த இடம், இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
எனது சிறுவயது கனவு நிறைவேறியதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும் நன்றி. அடுத்து, என் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட என்னுடைய கதாநாயகன், என்னுடைய மாப்பிள்ளை விமலுக்கு நன்றி.
கன்னிமாடத்தில் என்னுடன் பணியாற்றிய கதாநாயகி சாயா தேவி இப்படத்தில் நடிக்கிறார். பருத்தி வீரன் படத்தில் ஒரு கலக்கு கலக்கி தமிழ்நாட்டையேத் திரும்பி பார்க்க வைத்த அன்பு சகோதரர் சரவணன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகவுள்ளார். சிறுவயதாக இருந்தாலும் இந்த கதையைக் கேட்டு தைரியமாக இப்படத்தை தயாரிக்க ஒப்பு கொண்ட தயாரிப்பாளர் சிராஜுக்கும் நன்றி. இந்த திரைப்படம் நடக்க உறுதுணையாக இருந்தவர் அன்பு சகோதரர் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணனுக்கும் நன்றி. மேலும், அன்பு சகோதரன் எஸ் போக்கஸ் எஸ்.சரவணன் மற்றும் டி.சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மா.பொ.சி. என்றதும், மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பெயர் தான் நினைவிற்கு வரும். ஆனால், தலைப்பு அதுவல்ல. மா என்ற எழுத்தில் துணைக் கால் சேர்த்து தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதைத் தெளிவுபடுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.
’மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்று வைத்திருந்தோம், அது பெரிய தலைப்பாக இருக்கிறது என்று சுருக்கி மா.பொ.சி. என்று வைத்தோம். ஒருவேளை ம.பொ.சி அவர்களை நினைவுபடுத்தினால் தமிழுக்குச் செய்யக் கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும். நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இப்படம் இருக்குமே தவிர, கலங்கப்படுத்தும் படமாக இருக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம். இப்படம் ம.பொ.சி. ஐயா அவர்களை போற்றக்கூடிய படமாகத்தான் இருக்கும்.
நடிகை ரமா அவர்களும் இப்படத்தில் நடிகவுள்ளர். ஒளிப்பதிவாளர் இனியன்,படத்தொகுப்பாளர் சிவா, இசையமைப்பாளர் சித்து குமார், மற்றும் கலை இயக்குனர் பாரதி , நடிகர் ஜனா இருவரும் புதியதாக இணைந்திருக்கிறார்கள்.” என்றார்.